Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

செவ்வாய், 25 அக்டோபர், 2016

தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் திருநாவலூர்



சுந்தரரர் அவதாரத்தலம்   திருநாவலூர்   (திருநாமநல்லூர்)

இறைவர் திருப்பெயர் : பக்தஜனேஸ்வரர், திருநாவலேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : மனோன்மணி, சுந்தரநாயகி, சுந்தராம்பிகை.
தல மரம் : நாவல்.
தீர்த்தம்         : கோமுகி தீர்த்தம்.
வழிபட்டோர் : சுக்கிரன்.

தேவாரப் பாடல்கள் : சுந்தரர் - கோவலன் நான்முகன்.

தல வரலாறு

இத்தலம் சுக்கிரன் வழிபட்ட தலம்.

சிறப்புகள்

மக்கள் வழக்கில் மட்டும் கொச்சையாகத் 'திருநாமநல்லூர் ' என்று வழங்குகின்றனர்.

சுந்தரரின் தந்தையாரான சடைய நாயனார் அவதரித்து சிவத் தொண்டாற்றிய பெரும்பதி.

அவதாரத் தலம் : திருநாவலூர்.
வழிபாடு : இலிங்க வழிபாடு.
முத்தித் தலம்  : திருநாவலூர்.
குருபூசை நாள்  : மார்கழி - திருவாதிரை.

        சுந்தரர் அவதாரத் திருத்தலம்.
அவதாரத் தலம் : திருநாவலூர்.
வழிபாடு : குரு வழிபாடு.
  முத்தித் தலம்    : திருஅஞ்சைக்களம் / திருக்கயிலாயம்
குருபூசை நாள்  : ஆடி - சுவாதி.

இஃது சுந்தரரின் தாயாரான இசைஞானியார் வாழ்ந்து, தொண்டாற்றி, முத்தி பெற்றத் தலமுமாகும். திருமுறைத் தலமற்றுமன்று அருணகிரிநாதரின் திருப்புகழும் இத்தலத்திற்கு உள்ளது.உள்ளே சுந்தரர் சந்நிதி உள்ளது; பரவை, சங்கிலியார் சூல எதிரில் வெள்ளையானை நிற்க, சுந்தரர் கையில் தாளமேந்தி காட்சி தருகிறார்.

தலப்பதிகக் கல்வெட்டுள்ளது.

நரசிங்க முனையரையர் அவதரித்து, அரசு வீற்றிருந்தவர்; குறுநில மன்னர்.

அவதாரத் தலம் : திருநாவலூர்.
வழிபாடு : சங்கம வழிபாடு.
முத்தித் தலம்      : திருநாவலூர்.
குருபூசை நாள்  : புரட்டாசி - சதயம்.

உள்பிரகாரத்தில் நரசிங்க முனையரையர் பூசித்த மிகப்பெரிய சிவலிங்க மூர்த்தம் உள்ளது.

கருவறைச் சுவரில் சண்டேஸ்வரர் வரலாறு சிற்ப வடிவில் - பால் கறப்பது, தந்தையார் மரத்தின் மீதேறிப் பார்ப்பது, திருமஞ்சனம் செய்வது, தந்தையின் கால்களை துணிப்பது, இறைவன் கருணை செய்வது வடிக்கப்பட்டுள்ளது.

நவக்கிரக சந்நிதியில் சுக்கிரனுக்கு எதிராக அவன் வழிப்பட்ட சுக்கிரலிங்கம் உள்ளது.

நவக்கிரகங்களில் நடுவில் உள்ள சூரியன் திசைமாறி மூலவரைப் பார்த்தவாறு உள்ளார்.

கோஷ்ட மூர்த்தமாகவுள்ள தட்சிணாமூர்த்தி உருவம் - ரிஷபத்தின் முன்னால் நின்று வலக்கையை ரிஷபத்தின்மீது ஊன்றி, மறுகையில் சுவடியேந்தி நிற்கும் அமைப்பு; கண்டு மகிழத் தக்கது.

சுந்தரர் மடாலயம் அழகான முன்மண்டபம்; சுந்தரர் கையில் செண்டுடன் அழகாக காட்சிதருகிறார்; இங்குள்ள உட்கோயில் தொண்டீச்சரம் எனப்படுகிறது; இது முதற்பராந்தகனின் முதல் மகன் இராசாதித்தனால் கட்டுவிக்கப் பெற்றது என்பது கல்வெட்டுச் செய்தி.

அமைவிடம்

அ/மி. பக்தஜனேசுவரர் திருக்கோயில், 
திருநாவலூர் & அஞ்சல், 
உளுந்தூர்பேட்டை வட்டம், 
விழுப்புரம் மாவட்டம் - 607 204.

தொலைபேசி : 04149 - 224391, +91-94433 82945.


மாநிலம் : தமிழ் நாடு 
சென்னை - திருச்சி டிரங்க் ரோடில் விழுப்புரம் தாண்டி உளுந்தூர்ப்பேட்டைக்கு முன்பாக, மடப்பட்டு தாண்டி, பிரதான சாலையில் உள்ள திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரிந்து எதிரே இடப்பக்கமாக செல்லும் பண்ருட்டி சாலையில் 2-கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்.

தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் வீரட்டானம் நாவுக்கரசர் பாடிய முதல் தலம்


திருஅதிகை வீரட்டானம்  (திருவதிகை)

இறைவர் திருப்பெயர் : வீரட்டேஸ்வரர், வீரட்டநாதர், அதிகைநாதர்.

இறைவியார் திருப்பெயர் : திரிபுரசுந்தரி
தல மரம் : சரக்கொன்றை.
தீர்த்தம் : கெடிலநதி (தென்கங்கை)

வழிபட்டோர் : திலகவதியார், அப்பர் பெருமான்.
தேவாரப் பாடல்கள்
1. சம்பந்தர் - 1. குண்டைக் குறட்பூதங்.

2. அப்பர்   - 1. கூற்றாயின வாறுவி, 
2. சுண்ணவெண் சந்தனச், 
3. முளைக்கதிர் இளம்பிறை, 
4. இரும்புகொப் பளித்த, 
5. வெண்ணிலா மதியந், 
6. நம்பனே எங்கள், 
7. மடக்கினார் புலியின், 
8. முன்பெலாம் இளைய, 
9. மாசிலொள் வாள்போல், 
10. கோணன் மாமதி, 
11. எட்டு நாண்மலர், 
12. வெறிவிரவு கூவிளநற், 
13. சந்திரனை மாகங்கைத், 
14. எல்லாஞ் சிவனென்ன, 
15. அரவணையான் சிந்தித், 
16. செல்வப் புனற்கெடில. 

3. சுந்தரர்  - 1. தம்மானை அறியாத.

thiruvadikai temple
தல வரலாறு

அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று.

திரிபுரத்தை எரித்த வீரச் செயல் நிகழ்ந்தத் தலம்.

ஞானசம்பந்தருக்கு இறைவன் திருநடனம் காட்டிய தலம்.

அப்பரின் தமக்கையார் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு செய்து வந்த திருத்தலம்.

திலகவதியார் தன்தம்பியாகிய (அப்பர்) மருள்நீக்கியாரை நல்வழிப்படுத்துமாறு இறைவனை வேண்ட, இறைவன் "சூலை தந்து ஆட்கொள்வோம்" என்று பதிலுறைத்த பதி.

சூலை நோயின் துன்பம் தாளப்பெறாத அப்பர் பெருமான், யாருமறியாமல் பாடலிபுத்திரத்தை (திருப்பாதிரிப்புலியூர்) விட்டு நீங்கி, இங்கு வந்து, தமக்கையாரைக் கண்டு, தொழுது, திருவாளன் திருநீறு தரப் பெருவாழ்வு வந்ததென்று பணிந்து ஏற்று, உருவார அணிந்து, அவர்பின் சென்று, அதிகைப் பிரான் அடிமலர் வீழ்ந்து வணங்கி, "ஆற்றேன் அடியேன்" என்று "கூற்றாயினவாறு" பதிகம் பாடிச் சூலை நீங்கப்பெற்ற அற்புதத்தலம்.


சிறப்புகள்

சைவத்துக்குத், திருத்தொண்டுக்கு உறைப்பான திருநாவுக்கரசரை வழங்கியருளிய பெருமைமிகு தலமிதுவே.

சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான 'உண்மை விளக்கம்' நூலை அருளிய 'மனவாசகங்கடந்தாரின்' அவதாரத் தலம்.

இத்தலத்தை மிதிக்க அஞ்சி சுந்தரர் அருகிலிருந்த சித்தவடமடத்தில் தங்கியதும் - திருவடி தீட்சை பெற்றதும் இத்தலமே.

பல்லவ மன்னனான மகேந்திரவர்மனின் மனத்தை மாற்றிச் சமண் பள்ளிகளை இடித்துக் குணபரவீச்சரம் எழுப்பச் செய்ததும் இத்தலத்தின் பெருமையை பறைசாற்றும் நிகழ்ச்சியாகும்.

அதிரைய மங்கலம், அதிராஜமங்கலம், அதிராஜமங்கலியாபுரம் என்னும் பெயர்கள் இத்தலத்திற்குரியனவாகக் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.

மணவிற் கூத்தனான காலிங்கராயன் என்பவன் இக்கோயிலுக்குப் பொன்வேய்ந்து நூற்றுக்கால் மண்டபம், மடைப்பள்ளி, யாகசாலை ஆகியவற்றை அமைத்து, அம்பாள் கோயிலையும் கட்டுவித்தான் என்பது கல்வெட்டுச் செய்தி.

தென்கங்கை எனப்படும் கெடிலநதி (தல தீர்த்தம்) பக்கத்தில் ஓடுகிறது.

மிகப்பெரிய கோயில், சுவாமி கர்ப்பக்கிருகம் தேர்போலப் பதுமைகளால் அலங்கரிக்கப்பட்டு, நிழல் பூமியில் சாயாதபடிக் கட்டப்பட்டுள்ளது.

கோபுர வாயிலில் இருபுறங்களிலும் அளவற்ற சிற்பங்கள் உள்ளன; வலப்பக்கத்தில் சற்று உயரத்தில் திரிபுரமெரித்த கோலம் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது.

வாயிலின் இருபுறங்களிலும் நடனக்கலைச் சிற்பங்கள் (பரத சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள 108 கரணங்களை விளக்கும் சிற்பங்கள்) அளவிறந்துள்ளன.

கோயிலின் உட்புறத்திலுள்ள மற்றொரு பதினாறுகால் மண்டபத்தின் இரு தூண்களில் ஒன்றில் சுப்பிரமணியத் தம்பிரான் (அமர்ந்த நிலை) சிற்பமும், இதற்கு நேர் எதிர்த்தூணில் சிவஞானத் தம்பிரான் (நின்று கைகூப்பிய நிலை) சிற்பமும் உள்ளது. சுப்பிரமணியத் தம்பிரான் என்பவர்தான் இக்கோயிலைத் திருத்திச் செப்பம் செய்தவர் என்றும்; இவர் சீடரான சிவஞானத் தம்பிரான்தான் முதன்முதலில் இத்திருக்கோயிலில் அப்பர் பெருமானுக்குப் பத்து நாள்கள் விழா எடுத்துச் சிறப்பித்தார் என்பர்.

இக்கோயிலில் திகவதியாருக்கு சந்நிதி உள்ளது.

அப்பர் சந்நிதி - மூலமூர்த்தம் உள்ளது; அமர்ந்த திருக்கோலம் - சிரித்த முகம் - தலை மாலை, கையில் உழவாரப்படை தாங்கிய பேரழகு.

பிரகாரத்தில் பஞ்சமுக சிவலிங்கமும் (பசுபதிநாதர்), வரிசையாகப் பல சிவலிங்கத் திருமேனிகளும் உள்ளன.

மூலவர் பெரிய சிவலிங்கத் திருமேனி - பெரிய ஆவுடையார்; சிவலிங்கத் திருமேனி பதினாறு பட்டைகளுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது.

கருவறை சுதையாலான பணி; இதன் முன் பகுதி வளர்த்துக் கற்றளியாகக் கட்டப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றிலும் குடவரைச்சிங்கள்.

நாடொறும் ஆறுகால பூஜைகள் முறையாக நடக்கின்றன.

இத்தலத்திலிருந்து 1 கி.மீ. தொலைவு சென்றால் ஸ்ரீ சிதம்பரேஸவரர் கோயில் உள்ளது; இதுவே சித்த வட மடம் ஆகும். இப்பகுதி புதுப்பேட்டை என்று வழங்குகிறது. (சித்வடமடத்தைப் பிற்காலத்தில் சித்தாண்டிமடம், சித்தாத்த மடம் என்றெல்லாம் வழங்கினர். இப்போது இப்பகுதி கோடாலம்பாக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.)

மகேந்திரவர்ம பல்லவன் கட்டிய குணபரவீச்சரம் - "ஆதிமூல குணபரேச்சுரன் கோயில்" என்றழைக்கப்படுகிறது. இது கோயிலுக்குப் பக்கத்தில் மேற்கே பெரியரோடு கரையில் உள்ளது. சிறு கட்டிடமாக இடிந்த நிலையில், உடைந்துபோன படிமங்களுடன் காணப்படுகிறது. தற்போதுள்ள கோயில் பிற்காலத்தில் பாண்டியர்களால் எழுப்பப்பட்டது. இக்கோயில் மராட்டிய, ஆங்கிலேயர் காலத்தில் போர்க்கோட்டையாகவும் மாறி மாறிப் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்றில் அறிகிறோம்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு 

கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டியிலிருந்து 2-கி. மீ. தொலைவில் உள்ளது. சென்னை, கடலூர், விருத்தாசலம், விழுப்புரம், சிதம்பரம் முதலிய இடங்களிலிருந்து பண்ருட்டிக்குப் பேருந்து வசதி உள்ளது. பண்ருட்டி இருப்புப் பாதை நிலையம்.

திருச்சிற்றம்பலம்
நன்றி ; சைவம் டாட் காம்
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

பாடல் பெற்ற திருத்தலங்கள் ... திருக்காழி (சீர்காழி)

இறைவர் திருப்பெயர் : பிரமபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதர்
இறைவியார் திருப்பெயர் : பெரிய நாயகி, திருநிலைநாயகி
தல மரம் : பாரிஜாதம்

தீர்த்தம் : பிரம தீர்த்தம், காளி தீர்த்தம், சூல தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், 
  வைணவ தீர்த்தம், இராகு தீர்த்தம், ஆழி தீர்த்தம், சங்க தீர்த்தம், 
  சுக்கிர தீர்த்தம், பராசர தீர்த்தம், அகத்திய தீர்த்தம், கௌதம தீர்த்தம், 
  வன்னி தீர்த்தம், குமார தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், 
  கேது தீர்த்தம், அண்ட தீர்த்தம், பதினெண்புராண தீர்த்தம், புறவ நதி, 
  கழுமல நதி, விநாயக நதி முதலிய 22 தீர்த்தங்கள்.

வழிபட்டோர் : பிரமன், குருபகவான், திருமால், சிபிச்சக்கரவர்த்தி, காளி, 
  பராசர முனிவர், உரோமசமுனிவர், இராகு, கேது, சூரியன், 
  அக்னி, ஆதிசேடன், வியாசமுனிவர், முருகப் பெருமான், 
  சந்திரன், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் முதலியோர்.

தேவாரப் பாடல்கள் : சம்பந்தர்: - 
பிரமபுரம்
1. தோடுடைய செவியன், 
2. எம்பிரான் எனக்கமுத, 
3. கறையணி வேலிலர், 
4. கரமுனம் மலராற், 
5. இறையவன் ஈசன் 

திருவேணுபுரம் 
1. வண்டார்குழலரிவை, 
2. நிலவும் புனலும், 
3. பூதத்தின் படையீனீர் 

திருப்புகலி
1. விதியாய் விளைவாய், 
2. ஆடல் அரவசைத்தான், 
3. உகலி யாழ்கட, 
4. முன்னிய கலைப்பொருளும், 
5. உருவார்ந்த மெல்லியாலோர், 
6. விடையதேறி வெறி, 
7. இயலிசையெனும், 
8. கண்ணுதலானும்வெண், 
9. மைம்மருபூங்குழல் 

திருவெங்குரு 
1. காலைநன் மாமலர், 
2. விண்ணவர் தொழுதெழு 

திருத் தோணிபுரம்
1. வண்டரங்கப் புனற்கமல, 
2. சங்கமரு முன்கைமட, 
3. கரும்பமர் வில்லியைக் 

திருப்பூந்தராய்
1. செந்நெலங்கழனி, 
2. பந்துசேர்விரலாள், 
3. தக்கன் வேள்வி, 
4. மின்னன எயிறுடை 

திருச்சிரபுரம்
1. பல்லடைந்த வெண்டலை, 
2. வாருறு வனமுலை, 
3. அன்னமென்னடை அரிவை 

திருப்புறவம் 
1. நறவ நிறைவண்டறைதார்க், 
2. எய்யாவென்றித் தானவ, 
3. பெண்ணியலுருவினர் 


திருச்சண்பைநகர்
1. பங்கமேறு மதிசேர், 
2. எந்தமது சிந்தைபிரியாத 

சீர்காழி
1. பூவார் கொன்றைப், 
2. அடலேறமருங், 
3. உரவார் கலையின், 
4. நல்லார் தீமேவுந், 
5. நல்லானை நான்மறை, 
6. பண்ணின்நேர்மொழி, 
7. நலங்கொள் முத்தும், 
8. விண்ணியங்குமதிக், 
9. பொங்குவெண்புரி, 
10. நம்பொருள்நம் மக்கள், 
11. பொடியிலங்குந் திருமேனி, 
12. சந்தமார் முலையாள், 
13. யாமாமாநீ யாமாமா 

திருக்கொச்சைவயம்
1. நீலநன்மாமிடற்றன், 
2. அறையும் பூம்புனலோடும், 
3. திருந்துமா களிற்றிள 

திருக்கழுமலம்
1. பிறையணி படர்சடை, 
2. அயிலுறு படையினர், 
3. பந்தத்தால் வந்தெப்பால், 
4. சேவுயருந் திண்கொடியான், 
5. மண்ணில் நல்லவண்ணம், 
6. மடல்மலிகொன்றை 

பல்பெயர்ப்பத்து
1. எரியார்மழுவொன்றேந்தி,, 
2. அரனை உள்குவீர், 
3. காடதணிகலங்கார, 
4. பிரமபுரத்துறை பெம்மா, 
5. ஒருருவாயினை, 
6. பிரமனூர் வேணுபுரம், 
7. விளங்கியசீர்ப் பிரமனூர், 
8. பூமகனூர்புத்தேளுக், 
9. சுரருலகு நரர்கள், 
10. வரமதேகொளா, 
11. உற்றுமை சேர்வது 

  அப்பர் :-
1. மாதியன்று மனைக்கிரு, 
2. பார்கொண்டு மூடிக், 
3. படையார் மழுவொன்று 

  சுந்தரர் : 
சாதலும் பிறத்தலும்
Cirkazi temple
தல வரலாறு
Inline images 1


திருஞானசம்பந்தர் திருஅவதாரம் செய்த திருப்பதி. தோணியப்பர் அம்பிகையிடம் கூற, அம்பாள் ஞானப்பால் பொற்கிண்ணத்தில் கொடுக்க, சம்பந்தர் அருந்தி ஆளுடைய பிள்ளையார் ஆன பதி.

அவதாரத் தலம் : சீர்காழி
வழிபாடு : இலிங்க வழிபாடு.
முத்தித் தலம்  : நல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்)
குருபூசை நாள்  : வைகாசி - மூலம்
திருஞானசம்பந்தர் பிறந்து, நடந்து, மொழி பயின்ற அவரது திருமனை திருஞானசம்பந்தர் தெருவில் உள்ளது. தற்போது அது தேவாரப் பாடசாலையாக இயங்குகின்றது.
பிரம தீர்த்தக் கரையில்தான் சம்பந்தர் பெருமான் ஞானப்பாலையுண்டார்.

இக்கோயில் வளாகத்தில் திருஞானசம்பந்தருக்குத் தனித் திருக்கோயில் உள்ளது.
இத்தலத்திற்குப் பன்னிரண்டுத் திருப்பெயர்கள் உண்டு; அவை -
பிரமபுரம் - பிரமன் வழிபட்டதால் இப்பெயர்.

வேணுபுரம் - இறைவன் மூங்கில் வடிவில் (வேணு = மூங்கில்) தோன்றினான்.

புகலி - சூரனுக்குப் பயந்த தேவர்களின் புகலிடமாய் விளங்கியது.

வெங்குரு - குரு பகவான் வழிபட்டது.

தோணிபுரம் - பிரளயகாலத்தில் இப்பதி தோணியாய் மிதந்ததால் இப்பெயர். பிரளய காலத்தில் இறைவன் தோணியில் காட்சித் தந்ததாலும் இப்பெயர்.

பூந்தராய் - பூமியைப் பிளந்து சென்று இரணியாக்கதனைக் கொன்ற வராகமூர்த்தி (திருமால்) வழிபட்டது.

சிரபுரம் - சிரசின் (தலை) கூறாய் உள்ள இராகுக் கிரகம் பூசித்தது.

புறவம் - புறா வடிவத்தில் வந்த அக்கினியால் சிபிச் சக்கரவர்த்தி பேறு பெற்றது.

சண்பை - சண்பை என்னும் கோரைப்புல்லால் மடிந்த தம்குலத்தோரால் நேர்ந்த பழி தீரக் கண்ணபிரான் (திருமால்) வழிபட்டது.

சீகாளி (ஸ்ரீகாளி) - காளிதேவி, சிதம்பரத்தில் நடராசப்பெருமானோடு வாதாடிய குற்றம் நீங்க, வழிபட்டது.

கொச்சைவயம் - மச்சகந்தியைக் கூடிய கொச்சை (பழிச்சொல்) நீங்கப் பராசரர் வழிபட்டது.

கழுமலம் - மலத் தொகுதி நீங்குமாறு உரோமசமுனிவர் வழிபட்டது.

குரு, இலிங்க, சங்கம வழிபாட்டு முறையில் பிரமன் பூசித்த பிரமபுரீஸ்வரர் இலிங்கமாகவும், ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் தந்தருளிய தோணியப்பர் குருமூர்த்தமாகவும், சட்டைநாதர் சங்கம வடிவினராகவும் உள்ளது. ஐந்தொழில்களைச் செய்தருளுவதற்கு இலிங்கமாகவும், பக்குவ ஆன்மாக்களுக்கு உபதேசம் புரிந்து, சிவஞானச்செல்வத்தை அளிப்பதற்குக் குருவடிவமாயும், பேரின்ப சித்திகளை அருளுவதற்கு சங்கம வடிவாயும், இறைவன் உள்ளார்.

சட்டைநாத சுவாமி இங்கு முக்கிய தெய்வமாகும். இரண்யனைக் கொன்ற நரசிங்கத்தைத் தடிந்து, அதன் தோலைச் சட்டையாகப் போர்த்துக் கொண்டதால், சுவாமித் இத்திருநாமத்தைக் கொண்டார்.

sattaiyappar vimAnam Cirkazi temple
thIrththam view vimAnam with thIrththam
சிறப்புக்கள்

"திருமுலைப்பால் உற்சவம்" இன்றும் சித்திரைப் பெருவிழாவில், இரண்டாம் நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தரின் நட்பைப் பெற்று, அவரால் அப்பர் எனப் பெயரும் பெற்றப் பதி.

சுந்தரர் இங்கு வந்தபோது, இஃது, சம்பந்தப்பெருமான் அவதரித்தபதி என்று மிதிப்பதற்கு அஞ்சி நகர்புறத்து நின்று பாட, இறைவர் காட்சி தந்த பதி.

திருநீலகண்ட யாழ்ப்பாணர், சம்பந்தரை வணங்கி, அவருடைய பதிகங்களை யாழிலிட்டு வாசித்து, சம்பந்தருடன் இருக்கும் பெருமைப் பெற்ற பதி.

கணநாத நாயனார் அவதரித்தத் திருப்பதி. இத்திருக்கோயில் வளாகத்தில் கணநாத நாயனாரின் திருவுருவச் சிலை உள்ளது.

அவதாரத் தலம் : சீர்காழி.
வழிபாடு : குரு வழிபாடு.
முத்தித் தலம்  : சீர்காழி.
குருபூசை நாள்  : பங்குனி - திருவாதிரை.
பிற்கால சோழ, பல்லவ, விஜயநகர மன்னர்களின் கல்வெட்டுகள் மொத்தம் நாற்பத்தாறு உள்ளன.

மாணிக்கவாசகர், பூந்துருத்திகாடநம்பி, பட்டினத்து அடிகள் - (திருக்கழுமல மும்மணிக்கோவை), நம்பியாண்டார் நம்பிகள் - (ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி, ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம், ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை, ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை, ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம், ஆளுடையபிள்ளையார் திருத்தொகை), அருணகிரிநாதர், தருமையாதீனத்துப் பத்தாவது குருமூர்த்தி சிவஞானதேசிகர், திருவாவடுதுறை ஆதீனத்து எட்டாவது குருமூர்த்தி மாசிலாமணி தேசிகர், மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, அருணாச்சலக்கவிராயர் முதலியோர் சீர்காழியின் சிறப்பையும், திருஞானசம்பந்தரின் பெருமைகளையும் பாடிப் புகழ்ந்துள்ளனர்.

சீர்காழி அருணாச்சலக்கவிராயர் இத்திருக்கோயிலுக்கு தலபுராணம் பாடியுள்ளார்.

இது, தருமைபுர ஆதீனத்துக்குச் சொந்தமானது.

இரண்டாம், மூன்றாம் குலோத்துங்கச் சோழன், வீரராஜேந்திரன், இராசகேசரி வர்மன், கிருஷ்ணதேவராயர் காலத்திய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

அமைவிடம்

அ/மி. பிரமபுரீசுவரர் திருக்கோயில், 
அ/மி. சட்டைநாத சுவாமித் திருக்கோயில், 
சீர்காழி & அஞ்சல் - 609 110.
சீர்காழி வட்டம், 
நாகப்பட்டினம் மாவட்டம்.

தொலைபேசி : 04364 - 270235.
மாநிலம் : தமிழ் நாடு 
மயிலாடுதுறை - சிதம்பரம் இரயில் பாதையில் சீர்காழி நிலையத்திலிருந்து 1.5-கி.மீ. தூரத்தில் இருக்கிறது. மயிலாடுதுறை - சிதம்பரம் பேருந்து பாதையில் உள்ளது. கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதி வெகுவாக உள்ளன.

திருச்சிற்றம்பலம்

நன்றி ; சைவம் டாட் காம்