Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

சனி, 17 மார்ச், 2018

எழுத்தாளர் சல்மா - பயணம் என்பது மனித நூலகம்! Courtesy: Vikatan


vikatan.com


‘வீட்டைத்தாண்டிச் செல்லக் கூடாது’ என்று வளர்க்கப்பட்ட ஒரு பெண்ணின் கால்கள், உலக வரைபடத்தில் குறுக்கும் நெடுக்குமாக தடம் பதித்த அனுபவம் இது. 50 நாடுகளுக்கு மேல் பயணம் செய்திருக்கிற சல்மா,  2000-ம் ஆண்டுக்குப் பிறகு எழுத வந்த பெண்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியவர். அதோடு, பஞ்சாயத்துத் தலைவி, சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர், வாரியத் தலைவர் என அரசியலிலும் பயணம் செய்துவருபவர். 

கடல் பார்க்கிறது பெருங்கனவு!


“திருச்சிக்கும் மதுரைக்கும் நடுவுல இருக்கு எங்க ஊரு துவரங்குறிச்சி. எங்க ஊருப் பொண்ணுங்களை வெளியூர்ல கட்டிக்கொடுக்க மாட்டாங்க. கல்யாணத்துக்குச் சேலை எடுக்க திருச்சிக்குப்போக மாட்டாங்க, பிரசவத்துக்கு மதுரைக்குக் கூட்டிட்டுப்போக மாட்டாங்க. கேட்டா, ‘அது நம்மூருக்கு ராசி இல்ல’ன்னு சொல்லு வாங்க. பள்ளிக்கூடத்துல படிச்சுட்டிருந்த எங்களுக்கெல்லாம் சென்னைக்குப் போறதும், கடல் பார்க்கிறதும் பெருங்கனவா இருந்துச்சு. ஆறாவது படிக்கும்போது, ஒரு கல்யாணத்துக்காக சென்னைக்குப் போன பெரியப்பாகூட நானும் போக அப்பாகிட்ட கெஞ்சிக் கதறி பெர்மிஷன் வாங்கினேன். சென்னைலதான் முதன் முதலா டி.வி-யைப் பார்த்தேன்.



பூட்டிய கதவுகளிலிருந்து மீட்பு



பெண்களுக்கு எப்போதும் பூட்டப் பட்டே இருக்கும் வீட்டின் கதவுகளிலிருந்து என்னை மீட்டெடுத்தேன். 2001-ம் வருஷம் எங்க ஊரு பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் ஜெயிச்சேன். அதனால, இலங்கைக்குப் போற வாய்ப்பு கிடைச்சது. அதுவரை நான் தனியா எங்கேயுமே போனதில்லை. கூட ஒரு நபர் வர அனுமதி கிடைச்சதால, என் தம்பியைக் கூட்டிட்டுப் போனேன். முதல் விமானப் பயணம்... காத்துல பறக்குற மாதிரி இருந்துச்சு.



அரசியல் பெண்களைப் பார்த்தேன்!



2005-ம் வருஷம் பஞ்சாயத்துப் பெண் தலைவர்கள் சிலருக்கு பாகிஸ்தானுக்குப் போகிற வாய்ப்பு கிடைச்சது. அந்த 18 நாள்கள் பயணத்தை என் வாழ்க்கையில மறக்க முடியாது. ஏன்னா, நான் வாழ்ந்துட்டு இருக்கிற பகுதியில இஸ்லாமியப் பெண்கள்னா எப்படி இருப்பாங்கனு தெரியும். பாகிஸ்தான் பெண்களிடம் பெரிய மாற்றத்தைப் பார்த்தேன். சுதந்திர மனப்பான்மையோட இருந்தாங்க. அங்கே `பஞ்சாயத்து ராஜ்'ஜில் ஏற்கெனவே பெண்களுக்கு 33% தந்திருந்ததால கூட்டங்களுக்கு, ஆண்களை விடவும் அதிகமான எண்ணிக்கையில பெண்கள் வந்தாங்க. அரசியல் விஷயங்களைத் தெளிவா பேசினாங்க. ராத்திரி 12 மணிவரைகூட இருந்தாங்க. குறிப்பா, பர்தா இல்லாம, சுடிதார் போட்டுட்டு வந்தாங்க. இஸ்லாமாபாத்தில் பொண்ணுங்க இன்னும் மாடர்னா டிரஸ் போட்டுட்டு இருந்தாங்க. ஆப்கானிஸ்தானை ஒட்டிய பகுதிகள்ல அப்படி இல்லை. ஒரே மதத்தைச் சேர்ந்த பெண்கள் இப்படி மூன்று வகையான வாழ்க்கையில் இருப்பது, எனக்குள் நிறைய சிந்தனைகளைத் தந்தது.



40 வயதானால் என்ன?



2007-ல் புத்தகக் காட்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஐரோப்பாவுக்குப் போனேன். அங்கெல்லாம், ‘40 வயசு ஆகிட்டா எல்லாமே முடிஞ்சுடுச்சு’னு நினைக்கிற ஒரு பெண்ணைக்கூட நான் பார்க்கலை. நார்வேயில் 65 வயசுப் பெண்மணி ஒருவர், தன் வேலையைவிட்டுட்டு யுனிவர் சிட்டியில படிக்கப்போறதா சொன்னார். 



2010-ல் தெற்காசியாவின் பெண் அரசியல் வாதிகள்ல 12 பேரை அமெரிக்காவுக்கு அழைச்சிருந்தாங்க. அந்த நாட்டு அரசு, எங்களைக் கவனிச்சிக்கிற பொறுப்பை 75 வயது தாண்டிய இரண்டு பெண்களிடம் கொடுத்திருந்தாங்க.  பனி கொட்டும் விடியற்காலையில், அவங்க ரெண்டு பேரும் யூனிஃபார்மோடு எங்களுக்கு முன்னாடியே புறப்பட்டுத் தயாரா இருந்தாங்க. அவங்களையெல்லாம் பார்க்கப் பார்க்க, வயதை வெறும் எண்ணாகக் கடக்கிற கலாசாரத்தை நாமும் பழகிக்கணும்னு முடிவு செஞ்சேன்.


இழப்புகள் தளர்த்தாத கம்பீரம்!



அதே அமெரிக்கப் பயணத்துக்கு பாகிஸ்தான் - கராச்சியில் துணை சபாநாயகராக இருந்த பெண் ஒருவரும் வந்திருந்தாங்க. ஆளுமையான உருவம். அஞ்சாத பேச்சு. ஆனா, பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்கியிருந்த விடுதிக்குப் போயிருந்தப்போ, அவங்க கதறி அழுதுட்டாங்க. அப்புறம்தான், ஒரு கார் விபத்தில் தன் ரெண்டு குழந்தைகளையும் அவங்க இழந்ததும், இந்தச் சிறுமிகளைப் பார்த்ததும் குழந்தைகள் ஞாபகம் வந்து அழுததும் தெரியவந்தது. வாழ்க்கையில் எவ்வளவு பெரிய இழப்பைச் சந்திச்ச பிறகும் தன் கம்பீரத்தைக் குறைச்சுக்காம இருந்த அந்தப் பெண்ணைப் பார்த்துப் பெருமைப்பட்டேன்.

நெகிழவைத்த எளிமை!



2010-ல், சமூக நல வாரியத் தலைவியாக இருந்தபோது, வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்றேன். அகர்தலாவில்  என்னை வரவேற்க அங்குள்ள ஓர் அரசு அலுவலர் காத்திருந்தார். ஐம்பது வயதுடைய அந்தப் பெண்மணி, கைத்தறிப் புடவை அணிந்து எளிமையாக இருந்தார். நான் இருந்த நான்கு நாள்களும் அத்தனை இடங்களுக்கும் எவ்வித சுணக்கமும் இல்லாமல் அழைத்துச்சென்றார். காலை முதல் இரவு வரை என்னுடனே இருந்தார். தன் மேலதிகாரிகளிடம் அந்தப் பெண்மணி காட்டும் பணிவு என்னை வியக்க வைத்தது. இதில் என்ன வியப்பு என உங்களுக்குத் தோன்றலாம். அந்தப் பெண்மணி திரிபுரா மாநில முதலமைச்சர் மாணிக் சர்க்காரின் மனைவி. 



கொலையாளியை மன்னித்த தாய் மனசு!



2013-ல் நெதர்லாந்து போனபோது, பாலஸ் தீனத்துப் பெண்மணி ஒருவரைப் பார்த்தேன். ராணுவத்தில் இருந்த அவங்க பையன், எதிர் தரப்பால கொலை செய்யப்பட, அரசாங்கத்திடம் கொலையாளியை மன்னிக்கச் சொன்ன அம்மா அவங்க. `இன்னொரு தாய்க்கும் மகனை இழந்த வலி வேணாம்'னு நினைச்சாங்களாம். அப்போதிலிருந்து இப்போதுவரை அந்நாட்டுப் பிரச்னை தீர குரல்கொடுத்துட்டு இருக்காங்க. தாய்மையின் பூரணத்தை அவங்ககிட்ட தரிசித்தேன்.



மரணத்தை எதிர்கொள்ளும் துணிச்சல்!



2015-ல் அமெரிக்கா போனப்ப, ஆர்மேனிய நாட்டு எழுத்தாளர் மரீனைப்  பார்த்தேன். நிறைய சிக்கல் உள்ள நாட்டில், அரசைக் கடுமையாக விமர்சித்து எழுதுவதில் கொஞ்சமும் பயப்படாதவங்க. கேன்சரால் பாதிக்கப்பட்டுத் தன் இரண்டு மார்பகங்களையும் இழந்திருந்த நிலையிலும், வாழ்க்கையைப் பற்றிப் புகாரோ, சலிப்போ இல்லை. ‘அடுத்து எப்போ பார்க்கலாம்’னு அவங்ககிட்ட கேட்டப்போ, ‘எனக்கு வரும் மிரட்டல்களைப் பற்றி உனக்கே தெரியும் இல்லையா..? எதுவும் நடக்கலாம். கூடவே, என் உடல்நிலை. வாய்ப்பிருந்தா பார்ப்போம்’னு அவங்க சொல்ல, `மரணத்தை எதிர்கொள்வதில் இவ்வளவு துணிச்சலா'ன்னு பிரமிச்சுப் போயிட்டேன். அவங்க அடிக்கடி சொல்ற ஒரு விஷயம், ‘தானா சாப்பிடறதிலேயோ, தனியா ஒரு விஷயத்தை அனுபவிக்கிறதிலேயோ என்ன மகிழ்ச்சி இருக்கு?’ இந்த வரியை என்னோட அடி மனசுல புதைச்சு வெச்சுக்கிட்டேன்.



பயணங்கள்தான் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தைக் கற்றுக்கொடுத்திருக்கு. பாரிஸ்ல பார்த்த காட்சி இது... பனி கொட்டிட்டே இருக்கும். வெவ்வேறு நாடுகள்லேருந்து வந்த அகதிகள் சாலையிலேயே வசிப்பாங்க. பச்சைக் குழந்தைங்களெல்லாம் பனியில கெடந்து வாடும். சில குழந்தைங்க இறந்தும் போயிடும். இதையெல்லாம் பார்த்தால், ‘இந்த உலகம் எல்லோருக்குமானது இல்லையா?’ என்ற கேள்வி நம்மைத் தொந்தரவு செய்துட்டே இருக்கும். யாரையும் வெறுத்துடாம எல்லோரையும் நேசிக்கணும்னு பயணங்கள் அழுத்தமா மனசுல பதிய வெச்சிருக்கு!”




அதென்ன ஆன்டி ஆக்ஸிடன்ட்?! Courtesy: Dinakaran

Dinakaran Daily news




டயட்டீஷியன்களும், டாக்டர்களும், மீடியாக்களும் அடிக்கடி குறிப்பிடுகிற ஒரு வார்த்தை ஆன்டி ஆக்ஸிடன்ட். அதென்ன ஆன்டி ஆக்ஸிடன்ட்? எதற்கு அவசியம்? ஊட்டச்சத்து நிபுணர் லஷ்மி விளக்கமளிக்கிறார்...‘‘நம் உடலில் இருந்தும், சுற்றுப்புறச் சூழல்களிலிருந்தும் Oxidants என்ற நச்சுக்குப்பைகள் உருவாகி நம் செல்களைத் தாக்குகின்றன. 

Free radicals என்ற பெயராலும் குறிப்பிடப்படும் இந்த நச்சுக்கள் முதுமைத் தன்மையை ஏற்படுத்துவதிலும், இதய நோய்களை வரவழைப்பதிலும், புற்றுநோய்களை உண்டாக்குவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த Oxidants-க்கு எதிராக செயல்பட்டு நம்மைக் காக்கும் சத்துமிக்க உணவு மூலக்கூறினைத்தான் ஆன்டி ஆக்ஸிடன்ட் என்கிறோம். காய்கறிகளிலும், பழங்களிலும், கீரைகளிலும் அதிகம் நிறைந்துள்ளது இந்த ஆன்டி ஆக்ஸிடன்டுகள்.’’ 

ஆன்டி ஆக்ஸிடன்டுகள் எப்படி செயல்படுகின்றன?

‘‘ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உடலில் உள்ள செல்களைப் பாதுகாக்கும். செல்களில் ஏற்படும் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தும். உடலில் உள்ள நோய்களை கட்டுப்படுத்தவும் எதிர்த்துப் போராடவும் வல்லமை கொண்டது. இது செல்களை பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதால் புற்றுநோய் தொடர்பான அனைத்து சிகிச்சைகளுக்கும் உதவுகிறது. செல்கள் தொடர்பான அனைத்து நோய்களை குணப்படுத்துவதிலும் ஆன்டி ஆக்ஸிடன்ட் முக்கியப் பங்காற்றுகிறது.’’

ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் எவற்றில் மிகுந்து காணப்படுகிறது?

‘‘வைட்டமின் ஏ, இ, சி போன்றவற்றில் இது அதிகமாக காணப்படுகிறது. வைட்டமின் ஏ, இ, சி நிறைந்துள்ள உணவுகளில், காய்கறிகள், பழங்களை உட்கொள்ளும்போது நமக்கு அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடன்டுகள் கிடைக்கிறது. கேரட், கீரை, ப்ரக்கோலி, முட்டை, பட்டாணி, ஆரஞ்சு, சாத்துக்குடி, பப்பாளி போன்றவற்றை நாம் தொடர்ந்து உட்கொள்ளும்போது நமக்கு அது அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடன்டை தருகிறது.’’

ஆன்டி ஆக்ஸிடன்டுகளால் ஏற்படும் நன்மைகள்?

‘‘நுரையீரல் தொடர்பான நோய்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட் தேவைப்படுகிறது. எனவே, ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ளும்போது இந்த நோய்களிலிருந்து தப்பலாம். இதயம் தொடர்பான நோய்களை தடுத்து சேத
மடைந்த செல்களுடன் எதிர்த்துப் போராடி அவற்றிலிருந்து நம்மை காக்கவும் ஆன்டி ஆக்ஸிடன்ட் உதவுகிறது. இதுதவிர அழகு சிகிச்சையிலும் ஆன்டி ஆக்ஸிடன்ட் முக்கிய இடம் வகிக்கிறது. 

சருமம் மற்றும் முடி சம்பந்தமான அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வாகிறது. தொடர்ந்து ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ள உணவுகள், பழங்கள், காய்கறிகளை உண்ணும்போது சருமத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கி முகம் பொலிவு பெறுகிறது. அழகு சிகிச்சையில் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த பொருட்களை தேர்வு செய்து பயன்படுத்தும் போதும் விரைவாகவும் நல்ல பலன் கிடைக்கிறது. உடலுக்கு சோர்வு நீக்கி, புத்துணர்வு தரும் வேலையைச் செய்வதும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள்தான்.’’

எப்போது அதிக ஆன்டி ஆக்ஸிடன்டுகள் தேவை?

‘‘சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இது அனைவருக்கும் நன்மை அளிப்பதால் அனைத்து வயதினருக்கும் இதன் தேவை உள்ளது. புற்றுநோய், நுரையீரல் மற்றும் இதயம் தொடர்பான பிரச்னையின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு அதிக ஆன்டி ஆக்ஸிடன்டுகள் தேவைப்படுகிறது. இதன் மூலம் நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடிகிறது. குறிப்பாக வயதானவர்களுக்கும், நீரிழிவு உள்ளவர்களுக்கும் இது அதிகம் தேவைப்படுகிறது. 

மிக அரிதாக ஒரு சில நேரங்களில் மட்டுமே நுரையீரல் நோயின் தீவிரத்தைப் பொறுத்து, சிலருக்கு உடலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் அளவை கட்டுப்படுத்த நேரிடும். ஆனால், இது தவிர்த்து அதன் தேவையே உடலுக்கு எப்போதும் அதிகம் உண்டு. எனவே, ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகளை எப்போதும் எடுத்துக் கொள்ள வேண்டும். டாக்டர்களும், டயட்டீஷியன்களும் இதற்காகத்தான் காய்கறிகள், பழங்கள், கீரைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள்.’’

மித்ரா

வன்முறை வலையில் விழும் மாணவ சமூகம்! Courtesy: Dinakaran


Dinakaran Daily news

வன்முறை வலையில் விழும் மாணவ சமூகம்!




காலையில் செய்தித்தாளைப் பார்த்தாலே அடிதடி, சண்டை, மோதல், மண்டை உடைப்பு, அரிவாள் வெட்டு, கத்திக் குத்து, தற்கொலை, கொலை, பாலியல் வன்முறை போன்ற சமூக அவலங்கள் நமக்கு அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. நாட்டின் வருங்காலத் தூண்களான மாணவர்களைப் பண்படுத்தும் அறிவுக்கூடங்களான பள்ளிகளையும் கல்லூரிகளையும் கூட இந்த அவலங்கள் ஆட்கொண்டுவிட்டன என்பதுதான் வேதனை. இன்றைய இந்த அசாதாரணமான சூழலுக்கு  என்ன காரணம் என கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தியிடம் பேசினோம். அவர் நம்மிடம் ஒருசில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘ஆசிரியர் -  மாணவர் உறவும் சக மாணவர்களுக்கிடையிலான உறவும் நாளுக்கு நாள் சிதைந்து வருகின்றது. கல்லூரி மாணவர்களை ஒரு கும்பல் பேருந்தில் ஏறி அரிவாளால் வெட்டியது; பள்ளி மாணவர் குழுவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டது; பள்ளி மாணவர்கள் சிலர் சேர்ந்து ஆசிரியரைத் தாக்கியது, பொறியியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரி முதல்வரைக் கத்தியால் குத்தியது; ஒன்பதாம் வகுப்பு மாணவன் பெண் ஆசிரியரைக் கத்தியால் குத்தியது; காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கல்லூரி மாணவன் விறகுக் கட்டையால் அடித்துக் கொன்றது; 

காதலர் நாளில் எட்டாம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியரே ரோஜாப் பூ கொடுத்தது போன்ற அவல நிகழ்வுகள் நம்மைப் பதறவைக்கின்றன.’’ என்கிறார் மூர்த்தி. இந்த அவலங்களைச் சட்டங்களால் மட்டுமே சரிசெய்ய முடியாது என்று கூறும் இவர், ‘‘ஒழுக்கத்தின் விளைநிலங்கள் என்று நம்பப்படும் கல்வி நிறுவனங்களும் இந்த அவலங்களுக்கும் சீரழிவுகளுக்கும் விதிவிலக்காக இருக்கவில்லை. நமது கல்விச் சூழலில் அதிகரித்து வரும் ஆசிரியர் - மாணவர் உறவு மற்றும் நடத்தைக் கோளாறு சார்ந்த சிக்கல்களைக் களைவதென்பது கல்வித்துறை மூலமாகச் சில அரசாணைகளை வெளியிட்டு ஒழுங்குப்படுத்துவது சுலபமான காரியமில்லை. 

சில ஒழுக்கக் கட்டுப்பாடுகளையும் நடத்தை விதிமுறைகளையும் கல்வி நிறுவனங்களில் நடைமுறைப்படுத்துவதன் மூலமும் உடனடியாக விரும்பத்தகுந்த மாற்றங்கள் நடக்கவும் போவதில்லை. காரணம், இந்த சிக்கல்களின் வேர்கள் ஆழமானவை; நுட்பமானவை; வெளிப்படையாகத் தெரியாதவை; சமூகச் சிக்கல்களோடு பின்னிப் பிணைந்தவை. எனவே, களைகள் வளர்கின்ற  சூழலை ஒழிக்காமல் களைகளைக் களைவதென்பது சாத்தியமற்ற செயலாகும்’’ என்கிறார் மூர்த்தி. ‘‘முதற்படியாக நாம் வாழும் சமூகத்தின் புறச்சூழல் எதார்த்தங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம். 

பள்ளி, கல்லூரி போன்ற நிறுவனங்களுக்கு வெளியில் நிலவுகின்ற, கற்றுக்கொடுக்கப்படுகின்ற, பழக்கப்படுத்தப்படுகின்ற  பழக்கங்களும் வழக்கங்களும் வாழ்வியலிலும் பள்ளிக் கல்லூரிக்கு உள்ளேயும் எதிரொலிக்கின்றன. அதில் முக்கிய இடத்தை இன்றைய திரைப்படங்கள் பிடிக்கின்றன என்று சொன்னால் மறுப்பதற்கில்லை. ஒரு பள்ளி மாணவனைப் பார்த்து  சக மாணவி கண்ணடிப்பது போன்ற ஒரு மலையாளத் திரைப்படப் பாடல் காட்சியை ஒரே வாரத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் யு-டியூப்பில் பார்த்து ரசித்துள்ளதே ஊடகங்களின் பரபரப்பான செய்தியாக இன்றைக்கு உள்ளது. 

இது ஒரு பொழுதுபோக்கு விஷயம்தானே என்ற எண்ணம் எல்லோருடைய பொதுப்புத்தியிலும் தோன்றும். சட்டப்படியான திருமண வயதை அடையாத பள்ளிக் குழந்தைகள் கண்ணடிப்பது, காதலிப்பது, கட்டிப்பிடித்து ஆடுவது, முத்தம் கொடுப்பது போன்ற திரைப்படக் காட்சிகளை எந்தச் சலனமும் இல்லாமல் பார்த்து ரசிக்கிறோம். இன்றைய அறிவியல் - தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஊடகங்கள் மிகப்பெரிய செல்வாக்கு செலுத்தி வருகின்றன. குறிப்பாக பதின்ம மற்றும் இளம் பருவ வயதுடைய ஆண் பெண் இருபாலரிடமும் சமூக வலைத்தளங்களும், திரைப்பட ஊடகமும் மிகப்பெரிய செல்வாக்கு செலுத்தி வருகின்றன. 

அறிவையும் நடத்தையையும் பண்படுத்தும் இடங்களாகக் காட்சிப்படுத்தப்படவேண்டிய கல்விச்சாலைகளை மது, காதல், மோதல் ஆகியவற்றின் பிறப்பிடங்களாகத் திரைப்படங்கள் உருமாற்றிக் காட்டுகின்றன. ஒரு கல்லூரியை, பள்ளியை கதைக்களமாக வைத்து திரைப்படம் எடுப்பவர்கள் அறிவார்ந்த செய்திகளைச் சொல்வதற்குப் பதிலாக காதல் கற்பனைகளையே  சொல்லிவிட்டுப் போகிறார்கள். காதலை வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை உணர்த்தாமல், காதலே வாழ்க்கை என்ற தவறான காதல் பற்றிய மிகைப்படுத்தல்களையே பெரும்பாலான திரைப்படங்கள் செய்கின்றன.  

அறிஞர்களையும், சாதனையாளர்களையும் முன்மாதிரிகளாகக் காட்டி அறிவாற்றலையும் படைப்பாற்றலையும் வளர்க்கவேண்டிய பதின்மப் பருவக் குழந்தைகளுக்குத் தவறானவர்கள் கதாநாயகர்களாகக் காட்டப்படுகிறார்கள். சக மனிதர்களுக்குள் முரண்பாடுகள் ஏற்படுவது இயற்கையானது என்ற நேர்மறை எண்ணங்களை திரைப்படங்கள் கற்றுக் கொடுக்கத் தவறி வருகின்றன. தனது விருப்பத்திற்கு மாறாக நடப்பவர்களிடம் அதிதீவிர எதிர்ப்பையும் கோபத்தையும் வெறுப்பையும் வன்மத்தையும் காட்டுவதுதான் தன்மானமும் வீரமும் உள்ள மனிதனின் அடையாளமாகவும் கதாநாயகத் தன்மையாகவும் திரைப்படங்கள் அர்த்தப்படுத்துகின்றன. 

எதிரியாகக் கருதப்படும் ஒரு நபர் சிறு தவறை செய்தால்கூட அதை மன்னிக்க முடியாத குற்றமாகக் கருதுவதையும் கதாநாயகன் கொலையே செய்தாலும் அதை வீரத்தின், தன்மானத்தின் அடையாளமாக கருதுவதையும் பெரும்பாலான திரைப்படங்களில் இடம்பெறும் வன்முறைக் காட்சி கள் நியாயப்படுத்துகின்றன. இப்படிப்பட்ட திரைப்படங்களைப் பார்ப்பதன் மூலமாக  நம்மை அறியாமலேயே நம் எண்ணங்களும் மன இயல்புகளும் மென்மைத் தன்மை இழந்து வன்முறைத் தன்மையுடையதாகவும் வக்கிரத் தன்மையுடையதாகவும் மாற்றமடைகின்றன. 

திரைப்பட ஊடகங்கள் செய்து வருகின்ற இப்படிப்பட்ட உளவியல் தாக்குதல்களுக்குப் பலியாகும் மாணவச் சமூகம் திரைப்படங்கள் சொல்வதையே பாடமாகக் கற்றுக் கொள்கிறது. கல்லூரிகளில் அறநெறி இலக்கியம் போதிக்கும் தமிழாசிரியர்களை நகைச்சுவைக் கதாபாத்திரங்களாக மட்டுமே இவர்களால்  காட்ட முடிந்தது. இதன் விளைவுகள் தான் மாணவர் சமூகம் அறநெறியற்ற வன்முறைக் கூட்டமாக இன்று மாறியிருக்கிறது. இன்றைக்கு நாம் வாழ்கின்ற குடும்பச் சூழல், வளர்கின்ற சமூகச் சூழல் ஆகியவற்றை விடவும் திரைப்படங்கள் இளைஞர்களின் சிந்தனைகளைக் கட்டமைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. எதிர்காலச் சமூகம் பண்பாடுடைய ஆரோக்கியமான சமூகமாக உருவாவதில் திரைப்படப் படைப்பாளிகளின் பங்கு முதன்மையாக உள்ளதை வளரும் படைப்பாளிகளாவது உணர வேண்டும்’’ என்றார்.

- தோ.திருத்துவராஜ்


இணைய மோசடிகளில் இருந்து தப்பிக்கும் வழி Courtesy: http://cybersimman.com

T5-Static-MPU-300x250

இணையம் மூலம் பலவிதமான மோசடி வலை விரிக்கப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். இத்தகைய மோசடி வலையில் சிக்கி ஏமாந்தவர்களின் கதைகளையும் நீங்கள் கேட்டிருக்கலாம். இணைய மோசடிகளில் சிக்காமல் இருப்பதற்கான அடிப்படையாக சொல்லப்படும் எச்சரிக்கை வழிமுறைகளையும் நீங்கள் அறிந்திருக்கலாம். இத்தகைய விழிப்புணர்வு அவசியம் தான்.
ஆனால் இணைய மோசடிகளை கண்டறிவதில் போதுமான ஆற்றல் இருக்கிறது என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா? இந்த கேள்விக்கு நீங்கள் ஆம் என்று நம்பிக்கையுடன் பதில் சொன்னாலும் சரி, இல்லை எனத்தயக்கமாக உங்கள் நிலையை ஒப்புக்கொண்டாலும் சரி, இணைய மோசடிகளை இனங்காணுவதில் உங்களுக்கு எந்த அளவுக்கு ஆற்றல் இருக்கிறது என சோதித்து பார்த்துக்கொள்வது நல்லது. இதற்கான எளிய சோதனையை டேக்பை எனும் விழிப்புணர்வு இணையதளம் வழங்குகிறது.
இணைய மோசடிகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிரிட்டன் அமைப்பால் இந்த தளம் நடத்தப்படுகிறது. இணைய மோசடியை கண்டறியக்கூடிய புத்திசாலி என நினைக்கிறீர்களா? எனும் கேள்வியோடு இந்த தளம், இணையவாசிகளை மோசடிகள் தொடர்பான சோதனையை எதிர்கொள்ள அழைக்கிறது. இந்த சோதனையில் வரிசையாக ஐந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
பொதுவாக மோசடி நபர்கள், இமெயில் அல்லது குறுஞ்செய்தி மூலம் தான் வலை விரிக்கின்றனர். இவர்கள் பின்பற்றும் உத்திகளும் பொதுவானவையாகவே இருக்கின்றன. வங்கி அல்லது நிதி அமைப்புகளிடம் இருந்து வந்திருப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும் மெயில்களை அனுப்பி, பாஸ்வேர்டு அல்லது வங்கி கணக்கு உள்ளிட்ட ரகசிய விபரங்களை சமர்பிக்குமாறு கோருகின்றனர். பல நேரங்களில் இந்த விவரங்களை சமர்பிப்பதற்காக என்று தனியே ஒரு இணைப்பை கிளிக் செய்யவும் தூண்டுகின்றனர். வங்கி அல்லது நிதி அமைப்பின் அதிகாரபூர்வ இணையதளம் போலவே தோற்றம் தரக்கூடிய அந்த தளம், ரகசிய தகவல்களை திருடுவதற்காக என்றே அமைக்கப்பட்ட போலி தளம் என்பதை அறியாமல் அதில் விவரங்களை உள்ளீடு செய்தால் விஷமிகள் அதை கொண்டு பணத்தை சுருட்டி விடுவார்கள். இது தவிர, உங்களுக்கு பணம் வந்து சேர்ந்திருக்கிறது அல்லது உங்கள் கணக்கில் இருந்து பணம் களவாடப்பட்டு விட்டது என்று வங்கியில் இருந்து செய்தி வந்திருப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தியும், தகவல்களை சேகரிக்க முயல்கின்றனர். பல நேரங்களில் அப்படியே கணக்கில் இருந்து பணத்தை மாற்றவும் வழி செய்து ஏமாற்றுகின்றனர்.
இத்தகைய மோசடி சூழல் தொடர்பான கேள்விகள் தான் வரிசையாக கேட்கப்படுகின்றன. உதாரணத்திற்கு முதல் கேள்வியை பார்க்கலாம்.
“ உங்கள் கணக்கில் மோசடி நடந்திருப்பதாக அறிகிறோம். எனவே, இது பற்றி நாங்கள் விசாரித்துக்கொண்டிருக்கும் நிலையில், எஞ்சிய தொகையை கீழே உள்ள பாதுகாப்பான கணக்கிற்கு மாற்றவும். உங்கள் கணக்கு பாதுகாப்பாக இருக்கிறது என்பதை உறுதி செய்த பிறகு முழுத்தொகையையும் உங்கள் கணக்கிற்கு மாற்றி விடுவோம்”. – இப்படி ஒரு செய்தி உங்கள் வங்கியிடம் இருந்து வந்திருப்பது போல தோன்றச்செய்தால், என்ன செய்வீர்கள், பணத்தை மாற்றுவீர்களா? என்பது தான் கேள்வி. இல்லை மாற்ற மாட்டேன் என்றோ அல்லது ஆம் மாற்றுவேன் என்றே இரண்டு விதமான பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து தேர்வு செய்த பிறகு, உங்கள் பதிலுக்கு ஏற்ப விளக்கம் அளிக்கப்படுகிறது. உங்கள் பதில் சரி அல்லது தவறு என குறிப்பிடப்பட்டு, வங்கிகள் ஒரு போதும் இது போல பணத்தை மாற்றுமாறு கேட்பதில்லை என்பதால் இது மோசடி மெயில் என சுட்டிக்காட்டப்படுகிறது.
உங்கள் இமெயில் கணக்கில் சந்தேகப்படும்படியான செயல்கள் இருக்கின்றன, எனவே கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து உங்கள் கணக்கை பாதுகாக்கவும் எனும் மெயில் வந்தால் என்ன செய்வீர்கள் என்பது இரண்டாவது கேள்வி. எதிர்பாராத விதமாக வரும் எந்த மெயில் உள்ள இணைப்பையும் ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம். ஏனெனில் இதுவும் மோசடி உத்தி என்று பதில் அளிக்கப்படுகிறது.
இப்படி வரிசையாக கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம் மோசடி நோக்கத்தோடு விரிக்கப்படும் இணைய வலையை நம்மால் அடையாளம் காண முடிகிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம். அது மட்டும் அல்ல, இதற்கான விளக்கத்தை படிக்கும் போது, இணைய மோசடி தொடர்பாக ஏமாற்றுக்காரர்கள் பின்பற்றும் வழக்கமான உத்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
பிரிட்டனில் உள்ளவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள இணையதளம் என்றாலும், இணைய மோசடிக்கான உத்திகள் உலகம் முழுவதும் ஒரேவிதமாகவே இருப்பதால் எந்த நாட்டில் உள்ள இணையவாசிகளும் இந்த கேள்விகளுக்கு பதில் அளித்து தங்கள் விழிப்புணர்வு நிலை எப்படி இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம்.
இந்த சோதனை தவிர, இணைய மோசடிகள் தொடர்பான விரிவான ஆலோசனைகளும் இந்த தளத்தில் இடம்பெற்றுள்ளன. போன் மூலம் மோசடி, இமெயில் மூலம் மோசடி, குறுஞ்செய்தி மோசடி என இணைய மோசடிகளில் எத்தனை வகையான மோசடிகள் உள்ளன என்பதை பட்டியலிட்டு, அதை தொடர்பான தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. முக்கியமாக இவற்றில் எல்லாம் சிக்கி கொள்ளாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரகசிய பின் எண்களை யாருக்கும் தெரிவிக்க கூடாது, பாஸ்வேர்டு விவரங்களை தேவையில்லாத இடங்களில் சமர்பிக்க கூடாது போன்ற பொதுவான ஆலோசனைகளை பெரும்பாலானோர் அறிந்திருந்தாலும், மோசடி நபர்கள் இணையவாசிகள் கண்ணில் மண்ணை தூவும் வகையில் வலை விரித்து காத்திருக்கின்றனர். பல நேரங்களில் இவர்கள் யோசிக்க வாய்ப்பு கொடுக்காமல் உடனடியாக செயல்படும் நிர்பந்தத்தை உண்டாக்கி ஏமாற்றுகின்றனர். இத்தகைய வலையில் சிக்க கொள்ளாமல் இருப்பதற்கு தேவையான விழிப்புணர்வு தகவல்களை இந்த தளம் ஆலோசனைகளாக வழங்குகிறது. இணையம் மூலமான நிதி மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், இணைய பாதுகாப்பிற்காக அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை தகவல்களை எளிய முறையில் இந்த தளம் வழங்குகிறது. இணைய தள முகவரி: https://takefive-stopfraud.org.uk/

இணையத்திற்கு ’நோ’ சொல்ல வைக்கும் டிஜிட்டல் பத்திரிகை! Courtesy: http://cybersimman.com

disconnect



புதிதாக டிஜிட்டல் பத்திரிகை ஒன்று உதயமாகி இருக்கிறது. அந்த பத்திரிகை புதியது மட்டும் அல்ல முற்றிலும் புதுமையானதாகவும் அமைந்திருக்கிறது. ’டிஸ்கனெக்ட்’ எனும் இந்த டிஜிட்டல் பத்திரிகையை ஆன்லைனில் படிக்க முடியாது, ஆப்லைனில் மட்டும் தான் படிக்க முடியும். அதாவது, இணைய வசதியை துண்டித்தால் மட்டுமே இந்த பத்திரிகையை படிக்க முடியும்.


டிஜிட்டல் பத்திரிகை என்றாலே இணைத்தில் வாசிக்க கூடிய இணைய இதழ் என்று தானே பொருள். அப்படியிருக்க இணைய இணைப்பை துண்டித்தால் மட்டுமே வாசிக்க கூடிய பத்திரிகையை டிஜிட்டல் இதழ் என்று எப்படி சொல்ல முடியும் என்று கேட்கலாம். ஆனால் இந்த அழகான முரணை மையமாக கொண்டே கிறிஸ் போலின் (Chris Bolin) என்பவர் இந்த புதுமையான டிஜிட்டல் பத்திரிகையை உருவாக்கி இருக்கிறார்.
இந்த பத்திரிகைக்காக அமைக்கப்பட்டுள்ள இணையதளத்தில் (https://thedisconnect.co/one/) நுழைந்ததுமே கொட்டை எழுத்துக்களில் தி டிஸ்கனெக்ட் எனும் பெயர் வரவேற்கிறது. அதன் மீது இதழ் ஒன்று குளிர் காலம் 1 என பருவம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிறகு ஆர்வத்துடன் இதழின் உள்ளடக்கத்தை தேடினால், ஆச்சர்யமே உண்டாகும். ஏனெனில்,” தயவுசெய்து இணைய வசதியை துண்டிக்கவும்” எனும் வாசகமே கண்ணில் படும். இது பார்வைகள், கதைகள் மற்றும் கவிதைகள் கொண்ட ஆப்லைனில் மட்டுமே படிக்க கூடிய பத்திரிகை என்ற விளக்கமும் அதனுடன் இடம்பெற்றிருக்கும். எனவே இந்த பத்திரிகையை காண, இணைய வசதியை செயலிழக்கச்செய்யவும் என குறிப்பிடப்பட்டிருக்கும்.
இந்த கட்டளைக்கேற்ப இணைய வசதியை துண்டிதால் மட்டுமே இதழின் உள்ளடக்கத்தை வாசிக்க முடியும். அப்படி தான் போலின் இந்த டிஜிட்டல் இதழை உருவாக்கி இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார்.
இணைய வசதியை செயலிழக்கச்செய்ததுமே, வழக்கமான டிஜிட்டல் இதழ் போல டிஸ்கனெக்ட் இதழின் கட்டுரைகள் திரையில் தோன்றுகிறது. கதைகள், கட்டுரைகள் மற்றும் கவிதைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இணையத்தை விமர்சிக்கும் கட்டுரை ஒன்றும் இதில் அடங்கும். மற்ற கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என எல்லாமே மனிதர்களுக்கும் தொழில்நுட்பத்திற்குமான உறவை மையமாக கொண்டிருக்கின்றன.
ஆக, இணையத்தில் இருந்து வாசகர்களை கொஞ்ச நேரமேனும் விடுவிப்பது தான் இந்த பத்திரிகையின் நோக்கம். டிஜிட்டல் இதழ் என்றாலும் கூட அதை வாசித்து மகிழ இணையத்தை விட்டு வெளியேற வேண்டும். வீட்டிலும் அலுவலகத்திலும் டெஸ்க்டாப், வெளியே சென்றால் ஸ்மார்ட்போன் என பெரும்பாலான நேரங்களில் நாம் தொழில்நுட்பத்திரைகளில் மூழ்கி இருக்கும் காலத்தில், இணையத்தில் இருந்து வெளியேற தூண்டும் ஒரு விஷயம் தேவை தான். அந்த தூண்டுதலும் இணையத்தில் இருந்தே வருவது கொஞ்சம் சுவாரஸ்யமான முரண் தான். அதை தான் போலின் தனது பத்திரிகை மூலம் செய்திருக்கிறார்.
ஆனால் இதற்கான போலினை தொழில்நுட்ப விரோதி என்று நினைத்துவிடக்கூடாது. அவர் ஒரு மென்பொருளாலர். அந்த திறனை கொண்டு தான் இந்த பத்திரிகையை உருவாக்கி இருக்கிறார். இணைய நுடபம் நல்லது தான் என்றாலும், பலரும் அதிலேயே முடங்கி கிடப்பது பிடிக்கவில்லை என்கிறார். இணையத்திற்கு அடிமையாகி விடும் இந்த தன்மையை தனது சொந்த வாழ்க்கையில் உணர்ந்ததன் பயனாகவே இது பற்றி தீவிரமாக யோசித்திருக்கிறார். மணிக்கணக்கில் இணையத்தில் உலாவியபடி இருப்பதால் நேரம் தான் வீணாகிறேதேத்தவிர உருப்படியாக எதுவும் நடப்பதில்லை என்கிறார் அவர்.
இணையத்தில் கவனச்சிதறலை குறைக்க உதவும் சேவைகளும் செயலிகளும் பல இருந்தாலும் கூட, சில நேரங்களில் இணையத்தை துண்டிப்பதே செயல்திறனுக்கான வழி என்கிறார். இதை உணர்த்தவே, டிஸ்கனெக்ட் பத்திரிகை என்கிறார்.
எல்லாம் சரி, இணைய வசதி இல்லாமல் பத்திரிகையை படிப்பது தொழில்நுட்ப நோக்கில் எப்படி சாத்தியமாகிறது என கேட்கலாம். பிரவுசர்களில் இருக்கும் குறிப்பிட்ட வசதியை பயன்படுத்தி இதை சாத்தியமாக்கி கொண்டுள்ளார். இணையதள முகவரியை கிளிக் செய்ததுமே மொத்த பத்திரிகையும் பதவிறக்கம் ஆகிவிடுகிறது. ஆனால் அந்த உள்ளடக்கம் கண்ணுக்குத்தெரியாமல் மறைந்து இருக்கிறது. இணைய வசதி துண்டிக்கப்பட்ட செய்தியை பிரவுசர் உணர்ந்ததும் இந்த உள்ளடக்கம் தோன்றுகிறது என அவர் விளக்கம் தருகிறார்.
போலின் ஏற்கனவே கடந்த ஆண்டு இதே போன்ற ஒரு இணையதளத்தை உருவாகி இருந்தார். ஆப்லைன் எனும் பெயரிலான அந்த இணையதளத்தையும், இணைய வசதி துண்டித்தால் மட்டுமே அணுகும் வகையில் வடிவமைத்திருந்தார்.  (https://chris.bolin.co/offline/ ) அந்த தளத்தில் நுழைந்ததுமே இந்த பக்கத்தை பார்க்க நீங்கள் இணையத்தில் இருந்து வெளியேற வேண்டும் எனும் வாசகம் தோன்றும். இணையத்தை துண்டித்தால் தான் அந்த தளத்தை அணுக முடியும்.
அதன் பிறகு, இணையத்தில் நேரத்தை வீணடிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான கட்டுரையை வாசிக்கலாம். சோதனை முறையில் அமைக்கப்பட்ட இந்த தளத்தின் தொடர்ச்சியாகவே தற்போது ஆப்லைனில் வாசிக்க கூடிய டிஜிட்டல் பத்திரிகையாக உருவாகியிருக்கிறது. இந்த காலாண்டு இதழை தொடர்ந்து புதிய அம்சங்களுடன் கொண்டு வரவும் திட்டமிட்டிருக்கிறார். இதற்கான நிதி திரட்டும் வழிகளையும் அவர் தேடிக்கொண்டிருப்பதாக சொல்கிறார்.
சரி, இந்த புதுமை இதழுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது. அமோகமாக இருக்கிறது, ஆனால் விமர்சனமும் இல்லாமல் இல்லை என்கிறார் போலின். ஒரு சிலர், இணைய பழக்கத்தை குறைப்பது தான் நோக்கம் என்றால், அச்சு பத்திரிக நடத்த வேண்டியது தானே, ஏன் இந்த டிஜிட்டல் பத்திரிகை என கேலியாக கேட்பதாக கூறும் போலின், இதற்கு மாறாக பலரும், இந்த முயற்சியின் தன்மையை புரிந்து கொண்டு ஆதரிப்பதாகவும் கூறுகிறார். இந்த பத்திரிகையை தேடிப்போய் வாங்க வேண்டாம், இதற்காக மரங்களை வெட்ட வேண்டாம் என்றெல்லாம் அவர்கள் குறிப்பிடுவதாகவும் தெரிவிக்கிறார்.
இணையம் சாத்தியமாக்கிய புதுமையில் இதுவும் ஒன்று தான் இல்லையா!