Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

திங்கள், 4 ஏப்ரல், 2022

பணம் மட்டும் வாழ்க்கையா?

2002 ம் ஆண்டில் வெளியான சேரனின் திரைப்படமான சொல்ல மறந்த கதை யில் இளையராஜாவின் குரலில் அமைந்த பாடல் பணம் மட்டும் வாழ்க்கையா? இந்த பாழாப்போன மனுசனுக்கு…” என்ற பாடலை நேற்று தற்செயலாக கேட்க நேர்ந்தது. அதில் முழுப்பாடலையும் கேட்பதை விட முதல் வரி என்னை பல கேள்விகளுக்குள்ளாக்கியது.

ஆம். பணம் சம்பாதிப்பதை விட நம் வாழ்க்கையில் சம்பாதிக்க வேண்டியது பல. அதில் முக்கியமானது நமது ஆரோக்கியம். நமது சந்ததிக்கு நல் ஆரோக்கியத்தை கொடுப்பதும் நமது கடமைதான். என்ன இவன் ஏதோ பிளேடு போடப்போகிறான் என்று உங்கள் மனதில் நினைப்பது தெரிகிறது.

நான் இங்கு சொல்ல விரும்புவது நமது குடும்பத்தினரின் ஊட்டச்சத்து குறைபாடு பற்றிய விசயம்தான். உங்களுக்கு அனீமியா என்றால் என்னவென்று தெரியுமா? ஜப்பானிய பெயரான சுனாமி என்றால் என்னவென்று கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ல் வடக்கு சுமத்ரா தீவின் அருகில் கடலுக்குல் ஏற்பட்ட நில அதிர்வின் பலனாக நம் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் கடல் கொந்தளித்து நம் மக்களைக் காவு வாங்கும் வரையில் நம் யாருக்கும் தெரியாத ஒரு பெயர். அதுபோல் அனீமியா எனும் ரத்த சோகை நம் மக்களில் பெரும்பாலானோருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தினாலும் நம் மக்கள் வெறும் சத்துக் குறைபாடு என்ற பெயரில் கடந்து செல்கின்றனர்.


நம் உடலில் தேவையான ஊட்டச்சத்துக் குறைபாடினால் ரத்தத்தில் சிவப்பணு உற்பத்தி குறைபாடும், அதனால் வெள்ளை அணுக்களின் விகிதம் அதிகரிப்பதும், ரத்த தட்டுகள் குறைபாடு போன்ற விளைவுகளும் அதனால் ரத்தத்தில் போதிய ஆக்ஸிஜன் குறைபாடும் ஏற்படுகிறது. ஹீமோகுளோபின், ரத்தத் தட்டுக்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையை சோதனை செய்வதன் மூலம் நமக்கு ரத்தசோகை எனும் அனீமியா பாதிப்பு உள்ளதா என்று கண்டறியலாம். கம்ப்ளீட் பிளட் கவுண்ட் எனும் முழு ரத்த எண்ணிக்கை சோதனை செய்வதன் மூலம் அனீமியா பற்றி கண்டறியலாம்.

கடந்த நவம்பர் 2021 ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் அனீமியாவால் பாதிக்கப்பட்டோரின் விகிதம் சுமார் 58.6 சதவீதத்திலிருந்து 67.1 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. 2015-16 ம் ஆண்டிலிருந்து 2021-22 ம் ஆண்டுக்குள் சுமார் 8.5 சதவீத பாதிப்பு அதிகரித்துள்ளது. 


மேலும் கடந்த ஜுன்
2021 ல் எடுக்கப்பட்ட தேசிய குடும்ப நல கணக்கெடுப்பின்படி நம் நாட்டில் 15 வயதுக்குட்பட்ட பெண்களில் சுமார் 46 சதவீதம் அனீமியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிகிறது.

கர்ப்பிணிப் பெண்களில் சுமார் 50 சதவீதம் ஊட்டச்சத்துக் குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாக பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமின்றியும், குறைபாடு களுடனும் பிறக்கின்றன. எனக்குத் தெரிந்தவரையில் கடந்த 10 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளில் பல பல்வேறு குறைபாடுகளுடன் பிறந்துள்ளன. அதற்கு குழந்தையில் தாய் தந்தை இருவருக்கும் அல்லது இருவரில் ஒருவருக்கு ஊட்டச்சத்து குறைபாடினால் ஏற்பட்ட அனீமியா ஒரு காரணம்.

நமக்குத் தேவையான சரிவிகித விட்டமின் சத்துக்கள், இரும்புச் சத்து, தாமிரம், துத்தநாகம் மற்றும் இதர கனிம சத்துக்கள் உடலில் தேவையான அளவு இருந்தால் மட்டுமே நமக்குத் தேவையான நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். ஆரோக்கியமில்லாத தாய் தந்தைக்கு பிறக்கும் குழந்தையும், ஏன் ஒட்டுமொத்த சந்ததியும் நல்வாழ்வு வாழ உங்களுக்கு அனீமியா  எனும் ரத்த சோகை வராமல் தடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தேவையான சோதனைகள் செய்து உங்களுக்கு தேவையான சத்துக்கள் உங்கள் உடலில் சரிவிகிதத்தில் உள்ளனவா என்று சோதித்து அறிந்து கொள்ளுங்கள். இன்று செய்யப்படும் ஒரு செலவு உங்கள் சந்ததியையே நல்வாழ்க்கை வாழ மேம்படுத்தும்.

நம் சமூகத்தில் உள்ள தொழில் அதிபர்களுக்கும், தன்னார் வலர்கள் மற்றும் பொதுத்தொண்டில் ஈடுபட்டிருக்கும் சமூக சேவகர்களுக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள். தங்களில் திட்டங்களில் ஊட்டச் சத்து குறைபாடினை சரிசெய்யும் வகையில் ஒரு நிகழ்வினை முன்னெடுக்கும் வகையில் அமைத்துக் கொள்ள வேண்டுகிறேன். பெரும் தொழிலதிபர்கள் கூட்டாண்மை சமூகப் பொறுப்பு எனும் கார்ப்பொரேட் சோஸியல் ரெஸ்பான்சிபிலிட்டி என்ற வகையில் செலவழிக்கும் சமூக நலத்திட்டங்களில் முதன்மை யாக இந்த திட்டத்தை செயல்படுத்தி நல்லதொரு ஆரோக்கியமான தலைமுறை உருவாக உதவி செய்தீர்களா னால் வரலாற்றில் உங்கள் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் இதர மருத்துவமனைகளின் நிறுவனர்கள் தங்களின் கடமையாக அனீமியா ஒழிப்புத் திட்டத்தை செயல்படுத்து வதன் மூலம் நம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து மாறு வேண்டுகிறேன்.

கட்டுரையாளர்: க. சங்கிலிக்காளை  

 

பொறுப்புரிமைத் துறப்பு: இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்களே. மேலும் சாலியர் குரல் இக்கட்டுரைக்கு எவ்விதத்திலும் பொறுப்பாகாது.