Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

திங்கள், 2 அக்டோபர், 2017

வள்ளலார் அவர்களின் 195வது அவதார தினம் 05-10-2017


வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய, வள்ளலார் என அறியப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 – ஜனவரி 30, 1874) சத்தியஞான சபை எனும் அமைப்பை நிறுவியவர். 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகில் உள்ள மருதூர் கிராமத்தில், இராமையா பிள்ளை, சின்னம்மை தம்பதிகளின் மகனாக அக்டோபர் 5, 1823 ல் அவதரித்தார். சகோதரர்கள் சபாபதி, பரசுராமன் மற்றும் சகோதரிகள் உண்ணாமலை, சுந்தராம்பாள். ராமலிங்கர் பிறந்த ஆறுமாத காலத்தில் அவரது தந்தை அகால மரணமடைந்ததால் தாயார் சின்னம்மை தன் ஐந்து குழந்தைகளுடன் பொன்னேரிக்கு (தற்போதைய திருவள்ளூர் மாவட்டம்) இடம்பெயர்ந்து வசித்து வந்தார். பின்னர் ஏழுகிணறு பகுதியிலுள்ள வீராசாமிபிள்ளை தெருவில் குடியிருந்து வந்தனர். அண்ணன் சபாபதி மிகச்சிறந்த சமயச்சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார். 


இராமலிங்க அடிகளார் அவர்கள் இயற்றிய திருவருட்பா நமது பள்ளிப் பாடத்திட்டத்தில் உள்ளது. 


இராமலிங்க அடிகள் வடலூர் மக்களிடமிருந்து மேட்டுக்குப்பம் எனும் இடத்தில் 80 காணி நிலம் பெற்று 23-05-1867 அன்று ஒரு தர்மசாலையைத் துவக்கியது மட்டுமல்லாமல், தர்மசாலைக்கு வரும் அனைவருக்கும் மூன்று வேளையும் அன்னதானம் வழங்குவதைத் துவக்கி வைத்தார். அன்று முதல் இன்று வரை அன்னதானம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  உலகின் பல்வேறு பகுதிகளில் வள்ளலார் தர்மசாலைகள் பல பக்தர்களால் ஏற்படுத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. 

இராமலிங்க அடிகளின் கொள்கைகள்:
கடவுள் ஒருவரே, அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.
புலால் உணவு உண்ணக் கூடாது. 
ஏந்த உயிரையும் கொல்லக் கூடாது. 
சாதி, மொழி, இனம் முதலிய வேறுபாடுகள் கூடாது
இறந்தவர்களை எரிக்கக்கூடாது. சமாதியில் இருத்த வேண்டும். 
பசித்தவர்  அனைவருக்கும் உணவளித்தல் வேண்டும். 
தெய்வங்களுக்கு பலியிடுதல் கூடாது. 
உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது. 
மதவெறி கூடாது. 

சத்திய தருமசாலை, சன்மார்க்க சங்கம், சத்திய ஞானசபை, சித்தி வளாகம் போன்ற அமைப்புகளை நிறுவிய அருளாளர் இராமலிங்க அடிகளார் 1874 ம் ஆண்டு தைப்பூச நன்னாளில் இறைவனுடன் கலந்தார். 


ஆண்டுதோறும் தைப்பூச நன்னாளில் வடலூரில் ஏழு திரைகள் விலகி ஜோதி தரிசனம் நிகழும். ஓவ்வொறு திரைக்கும் ஒவ்வொரு சக்தி என்பது நம்பிக்கை. 
கறுப்புத்திரை  - மாயா சக்தி
நீலத்;திரை  - கிரியா சக்தி
பச்சைத்திரை  - பராசக்தி
சிவப்புத்திரை  - இச்சா சக்தி
பொன்வண்ணத்திரை  - ஞானசக்தி
வெண்மைத்திரை  - ஆதிசக்தி
கலப்புத்திரை – சிற்சக்தி


தைப்பூச நன்னாளில் கிழக்கே சூரியனும், மேற்கே சந்திரனும் காணப்பெறும் நேரத்தில்தான் ஞான சபையில் அருட்பெரும் ஜோதியை காட்டியருளினார் வள்ளலார். இதனை உணர்த்தும் விதம் ஆண்டுதோறும் தைப்பூச நன்னாளில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. 




அந்நாளில் காலை 6 மணி முதல் ஏழு திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெறும்போது பக்தர்கள் “அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை” என்ற மகாமந்திரத்தை முழங்கி ஜோதி தரிசனம் செய்கின்றனர். 

தொடர்ந்து காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி ஆகிய நேரங்களில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. 

வள்ளலார் காட்டிய அறவழியில் நம் சாலியர் சமூகம் ஒவ்வொரு தைப்பூச நன்னாளிலும் அன்னதானம் அளித்து வருகிறோம்.

 ஆனால் அவரது முக்கியக் கொள்கையான அசைவம் உண்ணாமல் இருத்தலை பின்பற்றுகிறோமா? நான் சுத்த சைவமாக இருந்து புலால் உண்ணாமல் இருக்கிறேன். நீங்கள்?


கட்டுரையாளர்: க. சங்கிலிக்காளை, தொடர்புக்கு: gsraj1979@gmail.com