Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

அத்தியாயம் 6 (பகுதி 1). தமிழ்நாடு சாலியர் பட்டாரியர் சமுதாய வரலாறு


கைத்தறி நெசவு

மனிதன் முதன் முதலில் புதிய கற்காலத்தில் துணி நெசவு செய்யக் கற்றுக் கொண்டான். அன்று முதல் இன்று வரை கைத்தறி நெசவு ஒரு குடிசைத் தொழிலாக நடைபெற்று வருகிறது. விஞ்ஞான முன்னேற்றத்தினால் நூல் நூற்றல், துணி நெய்தல் போன்றவை மில்கள் மூலம் நடத்தப்பட்டு வந்தாலும், பழைய கைத்தறி இன்னும் குடிசைத் தொழிலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தக் கைத்தறியை நம்பி பல இலட்சம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். கைத்தறியின் பல்வேறு பாகங்கள் கீழ்வருவனவாம்:

1.            அச்சு விழுது
2.            அடிமரம்
3.            ஓடம்
4.            ஜவுளி சுற்றும் ரோதை
5.            கால் மிதிப்பலகைகள்
6.            பாவு நூல்
7.            ஊடை நூல்

அச்சு என்பது நீளவாட்டில் வரும் பாவுநூல் தொடர்பாக ஒரே அகலத்தில், ஊடை நூலால் நெருக்கப்படும் உபகரணம் ஆகும்.  இது குறிப்பிட்ட நம்பர் நூலுக்கு ஏற்ப நெருக்கமாக அமைந்திருக்கும்.  நீளவாட்டிலுள்ள பாவு நூல் இந்த வரிசையான அச்சுக் கம்பிகளின் வெளிகளின் வழியாக ஊடுருவி வரும். அச்சு அடிமரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.

விழுதுகள்:
விழுதுகள் என்பது மெல்லிய பாலிஷ் செய்யப்பட்ட கயிற்றினால் பின்னப்பட்டது. விழுதுகளின் மத்தியில் உள்ள கண்களில் நீளவாட்டிலுள்ள பாவு நூல் ஊடுருவி வந்து, அடுத்துள்ள அச்சுகளின் வெளி வழியாக ஊடைநூல் நெசவுக்குத் தயாராக வைக்க உதவும்.  இந்த விழுது அல்லது பண் என்பது நமக்கு வேண்டிய அகலம், நெருக்கம் முதலியவற்றை நெய்யப்படும் துணிகளுக்குத் தக்கவாறு அமைக்க உதவும்.

இந்த அச்சு, விழுது இரண்டும் நெசவுக்கு வேண்டிய துணியின் தரம், அல்லது நெருக்கம், துணியின் ஓரங்களில் வரும் விளிம்புகள் முதலியவற்றுக்குத் தக்கவாறு அமைக்கப்படும்.

அடிமரம்:
இந்த உபகரணம் விழுதுக்கு முன்னதாக அச்சுபொருத்தப்பட்டு முன்னும் பின்னும் அசைந்து ஊடு இழைகளை நெருக்க உதவும்.  அடிமரம் அசையும்போது அதன் முன் உள்ள விழுதுகள் வழியாக வரும் பாவுநூல் இழைகள் மேல்புறம் பாதியாகவும், கீழ்ப்புறம் பாதியாகவும் விரிந்து அதன் மத்தியில் ஊடு இழை செல்லுமளவுக்கு அமையும், அடிமரத்தில் இரு புறங்களிலும் அமைந்துள்ள பெட்டி போன்ற அமைப்பில் ஊடை நூல் கண்டு பொருத்திய ஓடம் இடப்பட்டு இரண்டு பக்கமும் உள்ள பெட்டியுடன் பிணைக்கப்பட்ட ஓடக்கயிறு மூலம் கையினால் இழுக்கப்படும், அப்பொழுது ஓடம் அதனடியுள்ள உருளை மூலம் ஒரு புறம் பெட்டியிலிருந்து மறுபுறம் பெட்டிக்கு பாவு நூலின்   ஊடாகச் செல்லும். டிமரம் ஓடம் ஓடிச் செல்லுமளவுக்குத் தண்டவாளம் போல் நீளமாக இருக்கும்.  ஓடம் அச்சுக்கு முன்புறமாக உள்ள அடிமரத்தின் ஓடுபாதையில் ஒரு புறமிருந்து மறுபுறம் கைவிசை இழுப்பதால் ஓடும்.  

ப்படி மறுபுறம் ஓடம் சென்றதும், கால் மிதிபலகைகளை மறுபடியும் மிதித்து பாவு நூல் மறுபடியும் அடிப்பக்கம் உள்ள பாவு நூல்கள் மேலாகவும், மேற்புறமுள்ள பாவு நூற்கற்றை கீழ்ப்புறமாகவும் வரும். இதற்கு இடையில் ஓடம் வழியாக வந்த ஊடுநூல் அச்சு மூலம் அடிமரத்தால் நெருக்கப்படும். இப்படி ஒவ்வொரு இழையும் ஓடத்தின் மூலம் மறுபுறம் சென்றதும், அடிமரத்தின் உதவியால் அத்துடன் பொருத்தப்பட்ட அச்சு மூலம் நெருக்கப்படும்.

விழுதுகள் நான்கு அடுக்காக அச்சுஅகலத்துக்கு அதாவது துணியின் அகலத்துக்குத் தக்கவாறு எண்ணிக்கை உடையதாக இருக்கும். இந்த விழுதுகள் கோர்க்கப்பட்ட கம்பி அல்லது கம்பு கீழே மிதிபலகையுடன் கயிற்றினால் இணைக்கப்பட்டிருக்கும்.  மிதிபலகைகள் மிதிக்கப்படும்போது விழுதுகள் இரு பிரிவாக பிரிந்து பாவுநூல் முழுவதையும் அகலவாட்டில் பாதி மேல்புறமும், மறுபாதி கீழ்ப்புறமுமாக விரிந்து மத்தியில் ஓடம் ஊடுநூலுடன் ஒடிச் செல்ல வழிவகுக்கும்.

கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்கு, கிணற்று சுவரில் இரு தூண்கள் கட்டி இந்த தூண்களை ஒரு விட்டத்தினால் சேர்த்து விட்டத்தின் மத்தியில் ஒரு இரும்பு வட்டு தொங்கவிட்டு, வட்டில் ஒரு கயிறு தொங்கவிட்டு, கயிற்றின் ஒரு முனையில் வாளி ஒன்று கட்டி, கயிற்றின் மறுபுறம் மெதுவாகத் தொங்க விடும்போது, வாளியின் எடையினால், வாளி கிணற்றுக்குள் இறங்குவதும், வாளியில் நீர் நிரம்பியதும் கயிற்றின் முனையைப்பிடித்து கீழ்நோக்கி இழுப்பதால் வாளி தண்ணீருடன் மேலே வரும்.  அதுபோல மிதிபலகையை மிதிக்கும்போது விழுதுகள் இருபிரிவாக விரியும். அதற்கு ஏதுவாக விழுதுகள் கோர்க்கப்பட்ட சட்டம் மேலே வட்டுக்களில் பொருத்தப்பட்டிருக்கும். மிதி பலகைகள் மாறி மாறி மிதிக்கப்படும்பொழுது பாவு நூல் பாதி மேலும் பாதி கீழும் (ஒன்றுவிட்டு ஒரு நூல்) விரியும்.

ஊடை நூல் அங்குமிங்குமாக ஓடத்துடன் ஓடி ஒவ்வொரு முறையும் நெருக்கப்படுவதுதான் நெய்தல் என்பதாயிற்று. ஓரளவு நெய்யப்பட்டதும்நெய்த துணியைச் சுற்றும் ரோதையில் இழுத்துச் சுற்றி மேலும் நெய்வதற்கு வசதியாக இருக்கும்.

இப்படி நெய்வதற்குப் பாவு நூலும் ஊடை நூலும் முன்னதாகவே தயார் செய்யப்பட வேண்டும். இதற்கு நீளவாட்டில் வரும் பாவுநூல் வேண்டிய நீளத்திற்கு ஓர் இராட்டினத்தில் சுற்றப்பட்டுத் தயார் செய்யப்படும். குழி நூலாக இருக்கும் நூல் கண்டுகளில் சுற்றப்படும். இதற்கு இராட்டினம் ஒன்று பயன்படுத்தப்படும். கழிநூல் ஒரு கூடை போன்ற சுற்றும் இராட்டினத்தில் பொருத்தப்பட்டு நூல் இழை இராட்டையிலுள்ள கதிரில் பொருத்தப்பட்ட நூல் கண்டில் சுற்றப்படும். கண்டுகளில் நூல் சுற்றப்பட்டதும், அவைகள் பாவு ஓடுவதற்குறிய கதிர்களில் பொருத்தப்படும். இந்தக் கண்டுகளிலிருந்து நூலிழைகள் சீராக ஒரு கருவியின் மூலம் கோர்க்கப்பட்டு அதன் வழியாகப் பெரிய இராட்டினத்தில் வேண்டிய நீளத்துக்குச் சுற்றப்படும்.  பாவு நூல் சிக்காதபடி ஒவ்வொரு ஒண்ணரை முழம் அளவில் பின்னல் முறையில் இராட்டினத்தில் சேர்க்கப்படும். பிறகு இந்த பாவு நூல் கஞ்சிப் பசையில் தோய்க்கப் பெற்று தெருவில் நீளமாக விரிக்கப்பட்டு பல தொழிலாளர்களால் ஒரே சமயத்தில் நேர்த்தி செய்யப்படும்.  இதற்கு பாவு தோய்த்தல் என்று பெயர். புல் கட்டு என்ற கருவியால் நூல் நேர்த்தி செய்யப்பட்டு சிக்கல் எதுவுமின்றிச் சுத்தமாக கஞ்சிப் பசையுடன் திறம்படுத்தப்படும். தலைமுடியைச் சீப்பு கொண்டு நேர்த்தி செய்வது போன்றதே இந்தப் புல்கட்டு மூலம் நூலிழைகளை நேர்த்தி செய்வது. கஞ்சி போடும்போது பாவு நூலில் ஒண்ணரை முழத்துக்குப் பின்னல் முறையில் உள்ள வெளியில் மெல்லிய கம்புகள் பொருத்தி தெரு நீளம் பாவு கட்டப்பட்டு நேர்த்தி செய்யப்படும். பின் ரோதையில் சுற்றப்பட்டு தறி நெய்யும் இடத்திற்கு கொண்டு வரப்படும். பாவு நூலில் உள்ள ஒவ்வொரு இழையும் தறியில் விழுதுகளுக்கு முன் வந்து நிற்கும். பழைய பாவு நூலுடன் கைகளால் நிரடப்படும். இப்பொழுது பாவு நூல் நெய்வதற்குத் தயாராகிறது.

ஊடை நூலும் நல்ல முறையில் கஞ்சியிடப்பட்டுச் சிறிய நூல் கண்டுகளாகச் சுற்றப்படும்.  நூல் கண்டுகள் ஓடம்என்ற அடியில் ரோதைகள் உள்ள கருவியில் பொருத்தப்பட்டு நெய்வதற்குத் தயாராகும்.

சிறிய நூல் கண்டுகள் பொருத்தப்பட்ட ஓடம் கைவிசையினால் இழுக்கப்படுவதால் அடியில் சிறு உருளையுடன் இருக்கும். கைவிசை இழுக்கப்படும்பொழுது ஓடம் அடியிலுள்ள உருளை மூலம் இலகுவாக அடிமரத்தின் மறுபக்கம் ஓடி வரும்.  மிகவும் மெல்லிய பட்டு நூலால் நெசவு செய்யப்படும் கைத்தறியில் இந்த ஓடம் மூங்கில் குழல்களால் செய்யப்பட்டிருக்கும்.  ஓடத்தின் இருபுறமும் கூர்மையாகக் குப்பி பொருத்தப்பட்டிருக்கும்.  அடியில் உருளை இருக்காது. இந்த ஓடம் அடிமரத்தின் பாதையில் கையினால் தள்ளப்பட்டு மறுபுறம் ஓடிவரும்.  குழிவெட்டி அதனுள் இறங்கி நெய்யும் தறியை குழித்தறியென்றும், மேசையில் உட்கார்ந்து நெய்யும் தறியை மேசைத் தறியென்றும் கூறப்படும். இதையே சில இடங்களில் சப்பரத் தறி என்றும் சொல்வதுண்டு.

****



திங்கள், 10 பிப்ரவரி, 2020

அத்தியாயம் 5 (பகுதி 2). தமிழ்நாடு சாலியர் பட்டாரியர் சமுதாய வரலாறு

ஆடை (தொடர்ச்சி)

சிந்துவெளி நாகரீகம்

இந்தியாவில் ஆதிவாசிகள் திராவிடர்கள் என்பதும் ;அவர்களுக்கேற்ப இப்பரந்த நாட்டில் வாழ்ந்த நாகர்என்ற பூர்வகுடியினரும் கைத்தறி நெசவில் தேர்ந்து விளங்கினர் என்பதும், சிந்து சமவெளி நாகரீகத்தில் காணக் கிடைக்கும் பருத்தி இழைகளே, இந்தியாவின் ஆடை பற்றிய உணர்வினை நல்கும் முதல் சான்றாகும்.

கி.மு. 2303 அளவில் சிந்துவெளி வணிகர்களின் வெளிநாட்டு வணிகப் பொருட்களில் பருத்தி ஆடையும் ஒன்று என்று சுமேரியன் கையெழுத்துப் படிகள் கூறுகின்றன.  மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட எண்ணற்ற நூற்கதிர் திருகுகள் இம்மக்கள் ஏழை பணக்காரர் வேறுபாடின்றி நூற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்ததை தெரிவிக்கின்றன.

பிற நாட்டு அறிஞர் எண்ணங்களும், எழுத்தும், தொல்பொரும் ஆய்வுகளும் பருத்தி இந்தியாவிற்குறியது என்பதை உறுதிபடுத்துகின்றன.  உலகில் மற்ற நாடுகள் நாகரீகம் அடையும் முன்னரே இந்தியர் பருத்தியை விளைவித்து நூல் நூற்று ஆடை நெய்யக் கற்றுக் கொண்டனர் என்பதை பெரிப்புனுஸ்என்பவரின் கடல்வழிப் பயணங்கள் குறிப்பிடுகின்றன.  பருத்தியின் பயனை சீனர்கள் நீண்டகாலம் உணராமல் வெறும் அழகுச் செடிகளாகவே பயன்படுத்தி வந்தனராம்.

சுமார் 2150 ஆண்டுகளுக்கு முன்பு சோழநாட்டின் வணிகம் அளவில் விரிந்தும் வருமானத்தில் மிகுந்தும் காணப்பட்டது. உரோமப் பேரரசின் செல்வமெல்லாம் ஆண்டொன்றிற்கு 650 மில்லியன் செஸ்டர்ஸ் காசுகளாக (நூறு மில்லியன் காசுகள்) இந்தியாவிற்குச் செல்கிறது என்று உரோமாபுரியின் எழுத்தாளர் பிளினி XII எழுதுகிறார். பிளினியின் காலம் கி.பி. 77.  பாண்டிச்சேரிக்கு அண்மையிலுள்ள அரிக்கமேட்டில் 1945 ல் கண்டுபிடிக்கப்பட்ட யவனர் குடியிருப்பு மலேசியா போன்ற நாடுகளுக்குரிய நுழைவுத் துறைமுகமாக உரோமர்களுக்கு அந்நாளில் பயன்பட்டு வந்ததாம். உரோமர்கள் சோழர்களின் உறையூர் ஆடை போன்ற பண்டங்களை வாங்கி, கிழக்கத்திய நாடுகளின் சந்தைகளுக்கும் உரோம நகரத்தின் சொந்த உபயோகத்திற்கும் பயன்படுத்தியதாகவும் அரிக்மேட்டில் உரோமானிய ஆலை ஒன்று இருந்ததாகவும், அந்த ஆலையில் உரோமானியர்களுக்குப் பிடித்தமான முறையில் ஆடைகள் பதப்படுத்தப்பட்டு, உரோமாபுரியின் உற்பத்தி செயல்முறையின் துணை பெற்ற பின்புதான் உறையூர்த் துணி ஏற்றுமதி செய்யப்பட்டது.  அரிக்கமேடு, உறையூர் அகல்வாராய்ச்சிகள் மூலம் நெசவுத் தொழிலைச் சார்ந்த வண்ணமூட்டலுக்கு சாயம் போடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட சாயத் தொட்டிகள் காணப்பட்டதாம்.  உறையூர்ச் சேலைகள் மிகவும் மெல்லிய நூலால் நெய்யப் பட்டிருக்கும். ஒரு புடவையை ஒரு தேங்காய் மூடியில் வைத்து அடக்கிவிடலாமாம்.

உறையூர் ஆடைகளை ரோம அரசர்களும் பெண்களும் விரும்பி வாங்கினர் என்று வரலாறு கூறுகிறது. ஆடைகள் சிலந்தி வலையைப் போன்று மிகவும் மெல்லியதாக இருந்ததாகவும், ‘சென்னேராஎன்ற மேல்நாட்டறிஞர் தாம் வரைந்த வழிச்செலவு வரலாற்றில் எழுபத்தெட்டு முழ நீளமுடையவையாயிருந்தும் உள்ளங்கைகளில் அடக்கி விடும்.  அத்துணை மெல்லிய விலையேறிய ஆடைகள் நெய்வதற்கும், அதற்குறிய பருத்தியைச் செப்பம் செய்வதற்கும் தமிழர்கள் கையாண்ட முறையைப்பற்றிப் பரக்கக் கூறியுள்ளார். உறையூர் பருத்தி மற்றும் பட்டு நெசவுக்குப் பெயர் பெற்று விளங்கியதால்தான் நெடுங்கிள்ளியிடமிருந்து நலங்கிள்ளி உறையூரின் உரிமையைப் பறித்ததோடன்றி உறையூரப் போன்ற நெசவுக் கேந்திரமான பாண்டியரின் மதுரையையும் நலங்கிள்ளி கைப்பற்றினான் என்று சோழர் வரலாறு கூறுகிறது.

உறையூர் கைத்தறி நெசவுத் தொழில் பற்றி பெரிபிளுஸ்என்ற நூலில் சிறப்பாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.  ஊறையூரில் நெய்யப்பட்ட ஆடைகள் நல்ல பாம்பு உரிக்கும் மேல்சட்டை போலவும். மேக மண்டலத்தில் காணப்படும் மேகக் கூட்டங்களின் சேர்க்கை போலவும் உள்ளது எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.  மேலும் இவ்வூரின்கண் நிகழ்த்திய அகழ்வாய்வில் சுட்ட செங்கல்களாலான தொட்டிகள் கிடைக்கப் பெற்றன.  அவை சாயம் தோய்க்கும் தொட்டிகள் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.  இத்தொல் பொருட்கள் கி.பி. 2 முதல் 5 நூற்றாண்டுகளானது எனக் கால வரையறை செய்துள்ளனர். இன்றும் இவ்வூர் கைத்தறி நெசவுக்கு பிரபலமானது. 100 x 100 நூலில் உறையூரில் தயாராகும் புடவைகளுக்கு அங்காடிகளில் தனிச்சிறப்பு உண்டு.
                (உறையூர் கே.ஆர். கிருஷ்ணமூர்த்தி)

பேராசிரியர் எஸ். வைத்தியலிங்கம் அவர்கள் எழுதிய “  Fine Arts and Crafts “ என்ற நூலில் தமிழர்கள் ஆதிகாலம் தொட்டே நெசவுக் கலையைப் படிப்படியாக வளர்த்து வந்ததாகவும், மிகவும் உயர்ரக துணிகளை  நெய்யும் திறமையைச் சங்க காலத்திலேயே பெற்று இருந்ததாகவும் கவர்ச்சிகரமான வண்ணங்களில் பஞ்சுப் பட்டாடைகளை உற்பத்தி செய்து வந்ததாகவும், எரிதிரிந்தென்ன பொன் புனை உடுக்கைகள் (பொன்னாடைகள்) நெய்வது முற்காலத் தமிழர்களுக்குப் புதுமையானதல்லவென்றும் தெரிவிக்கிறார்.
(பரிபாடல் 1:10)

இசைக் கலைஞர்களும் ஆடற் கலைஞர்களும் தங்கள் திறமையையும் கலை முதிர்ச்சியையும் காட்டுவதற்காகத் தங்கள் கந்தலாடைகளைக் களைந்து விட்டு மிகவும் விலை உயர்ந்த ஆகைளை அணிந்து வந்தனர் என்று புறநானூறு கூறுகிறது.

                “தன்னுழைக் குறுகல் வேண்டி யென்னரை
                முதுநீர்ப் பாசியன்னவுடை களைந்து
                திருமலரன்ன புதுமடிக் கொளீஇ”                                                       (புறம் 390:13.15)

மார்க்கோ போலோஎன்ற வெளிநாட்டுப் பயணி தன்னுடைய நூலில் தென்னகத்தில் மிக உயர்ந்த, மிகவும் மென்மையான பருத்தி நூல் துணிகள் நெய்யப்பட்டதாகவும், அவற்றின் விலை மிகவும் அதிகமாக இருந்ததாகவும், அந்தத் துணிகள் சிலந்தி வலையைப் போலவே இருந்ததாகவும், அந்தத் துணியால் ஆன ஆடைகளை அணிந்து மகிழாத அரசனோ அரசியோ இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.  மார்க்கோ போலோ இங்கு குறிப்பிட்ட பகுதிகள் குமரி முனையிருந்து நெல்லூர் வரையிலான பாண்டி நாடாகும். இதிலிருந்து பாண்டி நாடும் நெசவுத் தொழிலில் சிறந்து விளங்கியது என்பது  தெளிவாகும்.

தமிழ்நாட்டு வணிகர்கள் கி.மு. 3000 ல் பாபிலோனுக்கும், கி.மு. 2400 முதல் எகிப்துக்கும், மிளகு, தேக்கு, புலித்தோல், முத்து, பவழம், வைரம், பருத்தி ஆடைகள் ஆகிய சரக்குகளைக் கிழக்கு ஆப்பிரிக்கா வழியாகத் தமிரின் நாவாய்கள் மூலமாக அனுப்பியதாக பிளினி, தாலமி, பெரிப்புளுஸ் போன்ற மேநாட்டு ஆசிரியர்களின் குறிப்புகளில் இருந்தும் சங்க நூற்சான்றுகளாலும் அறிகிறோம்.

இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே இந்தியர்கள் சீனர்களுடன் வணிகத்தொடர்பு கொண்டிருந்தனர் என்பதையும், உரோமாபுரி வணிகர்கள் இந்தியப் பட்டாடைகளின் நேர்த்தியைக் கண்டு ஆச்சரியப்பட்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றன. சந்திரகுப்த மௌரியரின் அமைச்சர், சாணக்கியன் தான் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில் பாண்டி நாட்டு முத்துக்களையும் பஞ்சாடைகளையும் போற்றித் தென்னாட்டுடன் வணிகம் செய்தல் சிறந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கி.மு. 2500 ல் ஆரியர்கள் புல்வெளிகளை நோக்கி மிகவும் செழிப்பான பூமியன சிந்துநதி தீரத்துக்குள் புகுந்தனர். ஏற்கனவே சிந்து சமவெளியில் மிகவும் உயர்ந்த நகரீகத்தினை உருவாக்கி இருந்த திராவிடர்கள் தெற்கே துரத்தப்பட்டனர். ஆரியர்கள் பிறகு சிந்து கங்கைச் சமவெளியில் ஆரிய வர்த்தம்என்ற பெயரில் ஆட்சி செலுத்தினர்.  பேராசிரியர் க.ந. திருநாவுக்கரசு எம்.ஏ. தமிழ், எம்.ஏ. வரலாறு, எம்.லிட். அவர்கள் எழுதிய சிந்துவெளிதரும் ஒளியில் உடைஎன்ற தலைப்பில் மொகஞ்சதாரோவில் உள்ள வீடுகள் பலவற்றுள் நெசவுத் தொழில் நடந்து வந்தது என்பதற்குச் சான்றுகளாக நூற்கும் கதிர்கள் பல கிடைத்துள்ளன. ஆவை பளிங்காலும், சங்கினாலும் களிமண்ணாலும் செய்யப்பட்டவை.      

பஞ்சும் கம்பளி மயிரும் கொண்டு நெசவுத் தொழில் நடத்தினர். பஞ்கின் துணுக்குகள் பல வெள்ளியால் செய்யப்பட்ட மலர்க் குவளைக்கு அருகில் கிடைத்துள்ளன.  அவற்றை நுட்பமாக ஆராய்ந்து பார்த்த ஆட்சியாளர்கள் இன்றைய இந்தியப் பஞ்சைப் போன்றே அப்பஞ்சும் இருப்பதாகக் கருதுகின்றனர்.  பஞ்சு தக்காணத்திலிருந்து சிந்துவெளிக்குச் சென்றிருக்க வேண்டும்.  அப்பஞ்சைத்தான் பாபிலோனியர் சிந்துஎன்றும், கிரேக்கர் சின்டன்என்றும் பெயரிட்டு வழங்கினர்.  சிந்துவெளியில் கிடைத்துள்ள ஓவியங்கள் சிலைகள் ஆகியவற்றிலிருந்து நல்ல சித்திர வேலைப்பாடுகள் அமைந்த ஆடைகளை நெய்தனர் எனத் தெரிகிறது.

அக்காலத்தில் ஆடைகளில் நீண்ட போர்வை அல்லது சால்லை ஓர் உடையாக இருந்தது.  இதனை அந்நகரங்களில் கண்டிடுக்கப்பட்ட இரண்டு சிலைகளின் உடைகளிலிருந்து அறியலாம்.  எளியவர் பருத்தி ஆடைகளையும், செல்வந்தர் உயர்ந்த பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பேர்வைகளையும் சால்வைகளாக அணிந்திருந்தனர்.

மொகஞ்சதாரோவில் பல்வகைப் பொத்தான்கள் கிடைத்துள்ளன.  இதனால் அந்நகர மக்கள் சட்டைகளையும் அணிந்திருந்தனர் என்பது புலனாகிறது.  பெண்கள் பாவாடைகள் அணிந்திருந்தனர்.  செல்வர் வீட்டு மங்கையர் மெல்லிய மேலாடையையும் அணிந்திருந்தனர் என்பதை முத்திரைகளினால் அறிகிறோம்.

மேலைநாடுகளில் பண்டைக் காலத்தில் பருத்தி ஆடை அணிந்திருந்ததாக தெரியவில்லை.  அந்நாடுகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியாவிலிருந்து பஞ்சை அறிந்தன.  அதனால்தான் பாபிலோனியர் பஞ்சை சிந்துஎன்றும், கிரேக்கர்கள் சின்டன்என்றும் பெயரிட்டு வழங்கினர். சிந்துவெளி மக்கள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பஞ்சினை நூற்று, ஆடைகள் நெய்யக் கற்றிருந்தனர் என்பது வியத்தற்குறிய செய்தியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கூற்றை வரலாற்றுப் பேராசிரியர்கள் ஆர்.ஆர். திவாகரும், எஸ். இராமகிருஷ்ணன் என்பாரும் தாங்கள் எழுதிய கி.மு. 3250 முதல் 2750 வரையிலான 500 ஆண்டு காலத்திற்கான ‘Hindu Civilisation’ என்ற நூலில் உறுதிப்படுத்துகிறார்கள்.

ஜியோனைன் அபோயர்தான் எழுதிய ‘Daily Life in Ancient India’ என்ற நூலில் கி.மு. 200 முதல் கி.பி. 700 வரையிலான காலத்தில் பட்டு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்றும் (பட்டுப்பூச்சி பற்றிய ரகசியம் சீனாலில் நீண்ட காலம் வெற்றிகரமாகக் காப்பாற்றப்பட்டது) இந்தியர்கள் அந்தப் பட்டு நூலை விலை உயர்ந்த மெல்லிய ஆடைகளாக உருவாக்கி தாங்கள் அணிந்தது போக எஞ்கியதை பெருமளவிற்கு ஏற்றுமதி செய்தனர்.  இந்தியர்கள் பருத்தியைத் தாங்களே பயிரிட்டு வளர்த்து அந்தப் பருத்தியிலிருந்து மிகவும் மெல்லிய மஸ்லீன் ஆடைகளை நெய்து அழகிய வண்ணங்களில் சாயம் தோய்த்தனர்.  இந்தத் தொழிலில் அவர்கள் சிறந்து விளங்கியதோடு, இந்தியாவில் - குறிப்பாக குஜராத் கிழக்கு வங்காளம் (டாக்கா) தென்னகம் முழுவதும் குறிப்பாக, திருச்சிராப்பள்ளி, தஞ்சை மசூலிப்பட்டணம் ஆகிய பகுதிகளில் செல்வச் செழிப்பையும் உருவாக்கினர். இத்துடன் மெத்தைகள் தலையணைகளுக்குத் தேவையான பண்படுத்தப்பட்ட பஞ்சும் அந்நாளில் மிகவும் முக்கியமான ஜவுளிச் சந்தையாகத் திகழ்ந்த எகிப்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்;டது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்டு நூலின் பூர்வீகம்:

உலகிலேயே முதன் முதலாகப் பட்டு உற்பத்தி செய்யப்பட்டது சீனாவில்தான். பட்டுத் துணிகள் என்றால் சீனப்பட்டுகளையே குறிப்பதாகவும், பதனிடப்படாத பட்டு (Raw Silk) அயல்நாடுகளு;குக் கால்நடையாகவே கொண்டு வரப்பட்டு ஏற்றுமதி செய்யப்பபட்டதாகவும் பெரிப்புனாஸ்கூறுகிறது.

ஜப்பானியர் இரண்டு சீன மகளிரைக் கடத்திச் சென்று இக்கலையைக் கற்றதாகவும் இந்தியனை மணந்த சீனப் பெண் தன் கூந்தலில் பட்டுப் பூச்சியைக் கடத்தியதன் மூலம் இந்தியாவில் பட்டு உற்பத்திக் கலையைப் பரப்பிதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன.  தமிழ்நாட்டில் கி.பி. 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டில் திருக்காம்பூரில் பட்டு நூல் கட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாம். பட்டின் தோற்றம் கி.மு. 2640 என்று கருதுகிறார்கள்.

சீனாவிலிருந்து பட்டு முதலில் அஸ்ஸாம், காஷ்மீரம், வங்காளம் போன்ற பகுதிகளுக்குப் பரவியது.  பட்டுப்புழுக்கள் வடிவத்தில் கர்நாடகத்திலும் பரவியது.  கர்நாடகத் தட்பவெப்பநிலை, மண் இவற்றின் தன்மை பட்டுப்பூச்சி வளர்ப்புக்கு மிக உகந்ததாக உள்ளது. இதனால் பட்டு என்றால் கர்நாடகம் நமக்கு பட்டென்று ஞாபகத்துக்கு வருகிறது.
(சாலியர் குரல் 9/88)

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கி.பி. 985 ல் முதலாம் இராஜராஜ சோழன் அரியணை ஏறினார்.  ஒரு நாட்டின் நாகரீக வளர்ச்சியின் அளவுகோல் அந்நாட்டு மக்கள் பயன்படுத்திய ஆடையணிகளாகும்.  இராஜராஜ சோழன் காலத்தில் தமிழக மக்கள் பருத்தி நூலாலும், பட்டாலும் நெய்யப்பட்ட நேர்த்தியான ஆடைகளை அணிந்திருந்தனர். அக்காலத்தில் பாலாவி போன்ற நுண்துகில் பொங்கும் நுரையைப் போன்ற கலிங்கம், காவியூட்டிய பூந்துகில், முயல் ரத்தம் போன்ற செவ்வண்ணப் பட்டுகள், பசிய இலை வேலைப்பாடுடைய பட்டுகள், மெல்லிய ஆடைகள் ஆகியவற்றை மக்கள் அணிந்து மகிழ்ந்தனர். இன்றும் தஞ்சைப் பெருங்கோவிலில் கோபுரத்தின் உட்புறம் தீட்டப்பட்டுள்ள ஓவியங்களில் மன்னர் இராஜராஜ சோழன் தன் மனைவிமார்களுடன் சிதம்பரம் நடராஜரை வழிபடுவது போன்று ஒரு வண்ண ஓவியம் உள்ளது. ஆந்த ஓவியத்தில் மன்னனும் அவர் மனைவியரும் மெல்லிய பட்டாடை உடுத்தியிருப்பது போலவும், தற்கால நாகரீக மங்கையர் உடுத்தி வரும் கால்சட்டை, மேலாடை (பைஜாமா, சுடிதார்) போன்ற உடைகளுடனும் தோளில் தொங்கு பையுமாகக் காட்சி தருகிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட இந்த ஓவியங்கள் இரசாயன முறையில் கழுவி நேர்த்தி செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கலிங்கமும், கலிங்கத்துப் பரணியும்:

ஆடையைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொற்கள் பல.  அவற்றுள் கலிங்கம்’, ‘காழகம்’, ‘அறுவை’, ‘துகில்’, என்பவை சில. கலிங்கத்தில் நெய்யப்பட்ட ஆடை கலிங்கமாகும். கலிங்கத்தைப் பற்றிய ஒரு சுவையான செய்தி பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் எழுதிய தமிழர் வாழ்வுஎன்ற நூலில் மதுரைப் பொற்றாமரைக் குளத்தில் இரட்டைப் புலவர்கள் நீராடிக் கொண்டிருந்தனராம். அப்போது ஒரு புலவரின் ஆடை மடியிலிருந்து நழுவி நீரில் மூழ்க, புலவர் ஐயோ, கலிங்கம் போகிறதேஎன்று கூவ, மற்றவர் நகைச்சுவையாக,
                “இக்கலிங்கம் போனலென் ஏகலிங்க மாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டே துணை
என்று பாடினார்.

பண்டைய இந்தியாவில்  56 நாடுகள் இருந்தனவென்றும் அவற்றில் கலிங்கமும் ஒன்று என்றும் படித்திருக்கிறோம்.  அசோக மன்னன் கலிங்கத்தை அடிமைப்படுத்தினான். பின்னர் சோழர்களும் கலிங்கத்தை வென்றனர். கலிங்க நாடு சோழர்களுக்குத் திறை செலுத்தி வந்ததாகவும், குலோத்துங்க சோழன் காலத்தில் திறை செலுத்தாமையால் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு குலோத்துங்க சோழனின் படைத் தலைவன் கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தின் மீது படையெடுத்து வென்று ஒரே நேரத்தில் 1000 யானைகளைக் கொன்று குவித்ததால், அக்கால மரபிற்கேற்ப சயங்கொண்டார்என்ற புலவர் குலோத்துங்க சோழனைக் காவியத் தலைவனாக உருவாக்கி கலிங்கத்துப் பரணியைப் பாடினாராம்.
ஆற்றங்கரை நாகரீகம் என்ற நூலில் திரு. மா. இராசமாணிக்கம் அவர்கள் மதுரையில் பருத்தி நூலாலும், பட்டு நூலாலும் ஒரு வகை எலி மயிராலும் கண்கவர் ஆடைகள் நெய்யபட்டு வந்தன என்று சிலப்பதிகாரம் கூறுகிறது என்பார்.  பாண்டியர் வரலாறுஎன்ற நூலில் டி.வி. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள்  பாண்டிய நாட்டில் முத்துக் குளித்தல் சங்கத்து வலையல் செய்தல் நூல் நூற்றல் ஆடை நெய்தல் ஆகிய தொழில்கள் நடைபெற்று வந்தன. நுண்ணிய பருத்தி நூலாலும் எலி மயிராலும் பட்டு நூலினாலும் ஆடைகள் நெய்யப்பட்டன என்பார்.

                “நூலினது மயிரினும் நுழை நூற்பாட்டினும்
                 பால்வகை தெரியாப் பண்ணூறருக்கத்து
  நறுமண்டி செறிந்த அறுவை விதியும்
(சிலம்பு ஊர்காண்காதை வரி 205.207)

              “பஞ்சிதன் சொல்லாப் பனுவ லிழையாகச்
       செஞ்சொற் புலவனே சேயிழையா எஞ்சாத
       கையேவா யாகக் கதிரே மதியாக
       மையிலா நூண் முடியுமாறு

என நன்னூல் இலக்கணம் எழுதிய பவனந்தி முனிவர் சிறந்த செய்யுள் எழுதுவதையும் நெசசுத் தொழிலையும் இணைத்துக் காட்டுகிறார். துகில் என்பது மாதர் அணியும் மெல்லிய ஆடையாகும்.  மகாபாரதத்தில் துச்சாதனன் திரௌபதியின் துகில்உரிந்தான் எனக் கேள்விப்படுகிறோம். கடற்கரைக்குத் தன்னுடைய காதலனான கோவலனுடன் சென்ற மாதவி நிறங்கிளர்ப் பூந்துகில் நீர்மையின் உடுத்தி இருந்தாள்என்று சிலம்பு கூறுகிறது. தஞ்சை மாவட்டத்தில் துயிலிஎன்ற ஊர் உண்டு.  அவ்வூரில் நெய்யப்படும் மெல்லிய ஆடை துயில்என்று வழங்கப்பட்டது.  நேர்த்தியான துகில் நெய்யப்பட்டதால் துகிலிஎன்றழைக்கப்பட்டு துகிலி துகில்என்று மருவியது என்பர். தறியினின்று துண்டிக்கப்பட்டது துண்டு, அறுக்கப்பட்டது அறுவை, குறைக்கப்பட்டது கூறை என்றாயிற்று.

கோசிகம், பீதகம், பச்சிலை, அரத்தம், நுண்துகில், சுண்ணம், வடகம், பஞ்சு, இரட்டு, பாடகம், கோங்கலர், கோபம், சித்திரக்கம்பி, குருதி, கரியல் பேடகம், சில்லிகை, துரியம், பங்கம், தத்தியம், வண்ணடை, சுவற்றுமடி, நூல்யாப்பு, திருக்கு, தேவாங்கு, பொன்னெழுத்து, குச்சரி, தேவகிரி, காத்தூலம், இறஞ்சி, வெண்பொத்தி, செம்பொத்தி, பணிப்பொத்தி என்று 36 வகை ஆடைகளை அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார்.  துகில், பூந்துகில் சீரை, சீலை, மேகலை, கூறை, சிற்றாடை, வட்டுடை, கலிங்கம், காழகம், தூசு, படம், படாம், துண்டு, தறி புடவை ஆகியனவும் துணி வகையைக் குறிப்பிடுவன என்று பா. இறையரசன் என்பார் தன் தமிழர் நாகரீக வரலாறுஎன்ற நூலில் கூறுகிறார்.

கவியரசு கண்ணதாசன் தன் தென்றல்பத்திரிகையில் கீழ்க்கண்ட வெண்பா பாடலை வெளியிட்டுள்ளார்.

                “பொன்னும் புகழ்முத்தும் பூந்துகிலும் நாவாயும்
                முன்னு திகழ் காதல் வீரமென
                தென்னகத்தே, அன்றிழந்ததேதும், வராது, நீ மட்டும்
                தென்றலே, ஏன் வந்தாய் செப்பு?”

ஆடைகளும், பெயர் காரணங்களும்:

1.            வேட்டி வெட்டப்படுவதால் வேட்டிஎன்றானது. பகுதியாக வெட்டிப் பயன்படுத்துவதால் வெட்டுதலை உடையது என்னும் பொருளில்  வேட்டிஎனப்பட்டது.

2.            துண்டு: துண்டு செய்யப்படுவதால் துண்டுஎனப்பட்டது.

3.            சேலை: சீலை என்பதே சேலை என்று வந்தது. திரைச்சீலைஎன்றுதான் இன்றும் வழங்கப்படுகிறது.

துண்டு, வேட்டி- இவற்றைவிட நீளமாக இருப்பதால் சீலை எனப்பட்டது. சீஎனும் தமிழ் வேர்ச்சொல்லுக்கு நீளமானது என்று பொருளாகும்.

4.            சட்டை: உடலைப் போர்த்துவதால் சட்டை எனப்பட்டது. குழிவாக ஊற்றும் திரவத்தைப் போற்றுவதால் கரண்டியைச் சட்டுவம் என்பர். இதைப் போலவே உடலைப் போர்த்தியபடி பேணியபடி அமைவதால், ‘சட்என்பதன் அடியாக சட்டை என்ற சொல் பிறந்தது. பாம்பின் மீது போர்த்தியதுபோல் இருப்பதால் பாம்புச் சட்டை என்று பெயர் வந்தது.

5.            ஆடை: உடலில் அணியும் துணி வகைக்கு ஆடை என்று பெயர்.  அடுக்கியிருப்பதால் ஆடை’. உடலோடு ஒட்டி அடுக்கி இருப்பதால் ஆடை என்ற பெயர் வந்தது. பால்மீது ஒட்டிப் பரவியபடி இருப்பதால் பாலேட்டைப் பாலாடைஎன்கிறோம்.

6.            கைலி: கையொலியில்’                என்ற இஸ்லாமியச் சொல்லிலிருந்து கைலிஎன்ற சொல் வந்தது. கைலி என்பது தமிழ்ச் சொல் அல்ல. டாக்டர் எச். சேளந்திரபாண்டியன் எம்.ஏ.,பி.எட், காப்பாட்சியர் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை. (சாலியர் குரல், ஜூலை, 1994).

*****

சனி, 8 பிப்ரவரி, 2020

அத்தியாயம் 5 (பகுதி-1). தமிழ்நாடு சாலியர் பட்டாரியர் சமுதாய வரலாறு

ஆடை

இன்றைய தமிழகத்தில் தொன்றுதொட்டு நெசவுத் தொழிலைக் குலத்தொழிலாக மேற்கொண்டு வாழ்ந்து வரும் சாலியர் பட்டாரியர் இனங்களின் பூர்வீகம் பற்றிய ஆய்வுதான் நான் மேற்கொண்ட முயற்சி.  இதன் அடிப்படையாக மானிட இனம் இந்த நாட்டில் சிறந்து விளங்கிய காலந்தொட்டு படிப்படியாக பல மாற்றங்களுக்கு உட்பட்டு ஆரிய இனத்தவர் வருகைக்குப் பின் வருணாச்சிரம தர்ம அடிப்படையில் பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்க்கை நடத்திவந்த நிலைமைகள் பற்றி இதுவரை ஆராய்ந்தோம்.  சாலியர் - பட்டாரியர் என்ற இந்த இனத்தவர் தொழில் கைத்தறி நெசவு. மனிதன் ஆடை உடுத்த ஆரம்பித்த காலந்தொட்டு கைத்தறி நெசவும் இருந்திருக்க வேண்டும் என்பது உண்மை. ஆகவே ஆடைபற்றிச் சற்று ஆராய்வோம்.

முற்காலத்தில் தேவர்கள் கூட ஆடையின்றித்தான் இருந்தார்களாம்.  இதனால் தேவர்கள் கைலாயம் சென்று பரமெஸ்வரனிடம் ஆடை நெய்வதற்குறிய வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டினார்களாம்.  அவர் மார்க்கண்டேயரை வரவழைத்து அவருடைய ஆசிரமத்தில் ஒரு மாபெரும் யாகம் வேள்வித்தீயுடன் நடத்த உத்தரவிட்டார்.  இந்த வேள்வி நடக்கும்போது சிவன் - பார்வதி, லட்சுமி - விஷ்ணு, சரஸ்வதி பிரம்மன் மற்றும் ரிஷிகள், முனிவர்கள் அனைவரும் இருந்தார்கள்.  வேள்வித் தீயில் தேவலோகக் கடவுள்கள் எதிர்பார்த்தபடி ஆயுதங்கள் சகிதமாக பஞ்சபுட்டிஎன்பவர் தோன்றி கைத்தறியில் தேவர்களுக்கு ஆடை நெய்து தரும் ஆள் யார் என்பதை இனங் காட்டலானார்.  அவர்தான் பாவநாராயணர்.  இடைவிடாத யாகத்திற்குப் பின் அக்னி குண்டத்தில் தோன்றிய பஞ்சபுட்டியும், பாவநாராயணரும்தான் மகாவிஷ்ணு கடவுளிடம் பாவு நூல் பெற்று சிவனின் மந்திரத்தை தொழில் நுணுக்க உத்தியாகப் பயன்படுத்தி தறி நெய்தார்கள் என்பது பழமையான வாய்மொழிக் கூற்றாகும்.
(திருமதி. அவையாம்பாள்)

பழங்காலத்தில் மனிதன் கோரைத் தழைத் தொடையும், மரப்பட்டையும், விலங்குத் தோலும் ஆடையாக உபயோகித்தான். புது கற்காலத்தில் மரவுரி போன்ற நாராடையும் போர்த்திக் கொள்ள ஆட்டு மயிர்க் கம்பளியும் முதற்கண் கைப்பின்னலாகவும் பின்னர் தறி நெசவாகவும் நெய்து கொண்டனர். படுக்க மூங்கில் பாயும், ஓலைப்பாயும் முடைந்து கொண்டான். பொற்காலத்தின்போது பருத்தி பஞ்சால் நூலிழைத்து பலவகை ஆடைகளை நெய்யத் தெரிந்து கொண்டான். நூல் நூற்றல் பெண்டிரால் செய்யப்பட்டது.
(தமிழர் வரலாறு தேவநேயப் பாவாணர்)

ஆதி மனிதன் மறைவிடங்களை மறைக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றியவுடன் இலை தழைகளை முதலில் அணிய ஆரம்பித்தான்.  பின் படிப்படியாக மரவுரி தோல் போன்றவைகளை ஆடைகளாக பயன்படுத்தினர்.  அடுத்து மழை, வெயில், குளிர் போன்ற தட்ப வெப்ப நிலைகளுக்கேற்ப நாகரீக வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு மாற்றங்கள் தோன்றின.

கூடைப் பின்னல், பறவைகள் கூடு கட்டும் தன்மை, தென்னை மரத்தின் பன்னாடை, சிலந்தி வலை அல்லது ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து காட்சி தரும் பொருட்கள், நெய்யும் உணர்வினை மானிடருக்கு அளித்திருக்க வேண்டும். இவ்வுணர்வு பெற்ற மனிதன் பின்னர் இவ்வுணர்வுக்கு வடிவம் கொடுக்க முற்பட்டதே நெசவுக் கருவிகளின் கண்டுபிடிப்பாகும்.  இழைகளைப் பிணைக்க கதிரைக் கண்டுபிடித்தான்.  முதலில் சிறு நூலாக இருந்தபோது, கைவிரலையும் பின்னர் நீளமுள்ள நூலைக் கம்பியிலும் இணைத்திருக்க வேண்டும். இதுவே நூற்புக் கதிரின் தோற்றம் எனலாம்.

அடுத்த நிலையில் நெசவுத் தறி உருவாக்கப்படுகின்றது. இதிலிருந்து படிப்படியாகப் பட்டறிவு கொண்டு முன்னேறுகிறான். தன்னுடைய பணிகளை எளிதாக்க, சிறப்பாக்கப் பல நெறிமுறைகளைக் கையாளுகிறான். இன்றைய பிரம்மாண்டமான நூற்பு ஆலைகள், நெசவாலைகள் இத்தகைய உணர்வுகளின் படிப்படியான வளர்ச்சியாகும்.

பண்டைத் தமிழர் தொழில்கள்என்ற நூலில் டாக்டர் வி.சி. சசிவல்லி அவர்கள் எழுதியவையாவது.

பண்டைத் தமிழகத்தில் வழக்கிலிருந்த தொழில்கள் குறித்து அறியும் முன்னர், தொழில் என்பதற்கு ஒரு வரையறை காண்போம். உழைப்பு என்பது பெயர்ச் சொல்லாக ஒரு செயல் அல்லது தொழிலைக் குறிக்கும். உழைத்தல் என்பது வினைச் சொல்லாகத் தொழில் செய்தலைக் குறிக்கும். உழைப்பவர் இனம் என்பது பொதுவாகத் தொழிலாளர்களைக் குறிக்கும்.

பொருளியல் பேரறிஞராகிய மார்சல், உழைப்பிற்குப் பின்வரும் இலக்கணம் கூறுகிறார். உழைப்பு என்பது மூளையையோ, உடலையோ முழுவதுவதுமாகப் பகுதியாகவோ வருத்தி ஏதொ ஒன்றைப் படைப்பதற்காகச் செய்கின்ற செயலைக் குறிக்கும். ஆனால் அந்தச் செயலிலிருந்து கிடைக்கும் மகிழ்ச்சியை உழைப்பு உள்ளடக்காது. இவ்விலக்கணத்தின்படி உழைப்பு எல்லா வகையான தொழில் திறமைகளையும் உள்ளடக்கும். கல்வி அறிவில்லாத தொழிலாளர்களின் உற்பத்தி முயற்சிகளும், கைத்தொழில் கலைஞர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், எழுத்தாளர்கள், வேளாண்மைத் தொழிலாளர்கள், வணிகர்கள், நுண்கலைஞர்கள், இலக்கிய அறிஞர்கள், மருத்துவர்கள், அறிவியல் வல்லுநர்கள், நிர்வாகிகள் ஆகியோரின் பணிமுயற்சிகளும் மார்சலின் உழைப்பு இலக்கணத்தினுள் அடங்குகின்றன.

இவ்வாறாக உழைப்பு என்பதனுள் அடங்கும் தொழில் திறமைகள் அனைத்தையும் தற்காலத் தொழில் வல்லுநர்கள் பல்வேறு விதமாக வகைப்படுத்திக் கூறுகின்றனர். எனினும் பண்டைத் தமிழர் செய்த தொழில்களை அவர்கள் வாழ்ந்த சமுதாய நிலைக்கு ஏற்றவாறு பின்வருமாறு வகைப்படுத்திக் கூறலாம்.
அ. வாழ்வியல் தொழில்          போர்த் தொழில்
   வாணிகத் தொழில்            கலையியல் தொழில்
ஆ. கைத்தொழில்                போர்த் தொழில்
   இயந்திரத் தொழில்            வணிகத் தொழில்
இ.  உடல் உழைப்புத் தொழில்         அறிவு உழைப்புத் தொழில்

இவ்வகைப்பாடுகளுள் முதல் வகையைப் பின்பற்றி தொழில்கள் என்ன இவ்வியல் அமைந்துள்ளது. பழந்தமிழர் செய்த தொழில்கள் எவை என்பதைக் கண்டறியப் பயன்பட்டவை சங்க கால இலக்கியங்களாகிய பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும் ஆவன. சங்க கால மக்களின் வாழ்வியலைக் குறித்து எழுதப்பட்ட நூல்களும், அக்காலத் தமிழகத்தைப் பற்றிய பிறநாட்டு அறிஞர்களின் குறிப்புகளும், தமிழரின் தொழில்திறன் குறித்து அறியத் துணை நின்றன. இவ்வாறு கிடைத்த தொழில்கள் பற்றிய செய்திகளுள் ஒரு சில தொழில்கள் நீங்கலாகப் பெரும்பாலானவை செய்யுட்களில் உவமைகளாகக் காட்டப்படும் இடங்களிலேயே அமைந்துள்ளன. ஏன்றாலும் அக்குறிப்புகளைக் கொண்டு இன்ன வகையில் ஒவ்வொரு தொழிலையும் செய்திருத்தல் வேண்டும் எனக் கணித்துக் கூறப்பட்டுள்ளது.

அ. பிரிவு.
வாழ்வியல் தொழில்             போர்த் தொழில்
வாணிகத் தொழில்               கலையியல் தொழில்

வாழ்வியல் தொழில்கள்
மக்களின் வளமான வாழ்விற்கும் வசதிக்கும் பயன்படும் தொழில்கள் அனைத்தும் வாழ்வியல் தொழில்கள் என்ற பிரிவில் அடங்குவன.  எனினும் அவற்றை 1. கைத்தொழில், 2. நிலஞ்சார் தொழில், 3. கைவினைத் தொழில், 4. பிற தொழில், 5. அறிவுசார் தொழில் எனப் பிரித்துக் காணின் மேலும் தெளிவு பெறும்.  எனவே, இம்முறையில் வாழ்வியல் தொழில்கள் பின்வருமாறு வகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளன.

1.            கைத்தொழில்கள்
பயிர்த் தொழில், நெசவுத் தொழில், தச்சுத் தொழில் - மட்கலத் தொழில், கொல்லுத் தொழில் - உலோகத் தொழில் - அணிகலத் தொழில்- தோல் தொழில்.

2.            நிழஞ்சார் தொழில்கள்
கால்நடைப் பேணல் - வேட்டையாடுதல் - ஆறலைத்தல் - மீன் வேட்டம் - உப்பு விளைவித்தல் - முத்துக் குளித்தல்.

3.            கைவினைத் தொழில்கள்
ஓலைத் தொழில் - பொம்மை செய்தல் - சாயப்பாக்கு சுண்ணம் தயாரித்தல் - கயிறு திரித்தல் - நூல் தொழில்.

4.            பிற தொழில்கள்
கள் அடுதல் - சலவைத் தொழில் - அட்டிற் தொழில் - கூவலர் - வேலன் - காரோடன் - விறகுவெட்டி யானைப்பாகன் - தேர் ஓட்டுபவன் - துடியன் - இழிசினன்.

5.            அறிவுசார் தொழில்கள்
அந்தணர் - அரசர் - அமைச்சர் - ஒற்றர் - தூதுவர் - புரோகிதர் - காவலர் - அறங்கூறவையத்தார் - அறிவர் - ஆசிரியர் - ஆவண மாக்கள் - கணியன் - நாழிகைக் கணக்கர் - புலவர் - மருத்துவர்

பயிர்த் தொழில்

மனித வாழ்விற்கு அடிப்படையானது உணவு. ஓவ்வொருவரது பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் அவரவரது கருமமே கட்டளைக் கல்லாய் அமையும். ஒருவர் சிறந்த பண்பினைப் பெற அடிப்படையாய் இருக்க வேண்டியது வறுமையின்மை. உணவு இன்றேல் பண்பாடும் இல்லை. பழம்பெருமையும் இல்லை. ஆதலின் உணவுப் பொருளின் இன்றியமையாமையை உணர்ந்து அவற்றைப் பெருக்கினர். உழவுத் தொழில் தலைமைத் தொழிலாக, உயிர்த் தொழிலாக போற்றப்பட்டது.

நெசவுத் தொழில்

மக்கள் சமுதாயத்திற்கு உணவினை அடுத்து இன்றியமையாது வேண்டப்படுவது ஆடையாகும்.  விலங்குகளைப் போலன்றி உடலை மறைத்தற்குறிய உடையினை அணிந்து மானத்துடன் வாழும் முறை மக்கள் வாழ்க்கையின் சிறப்பியல்பாகும். நாகரீகம் வளராத மிகப் பழங்காலத்தே மக்கள் தழை, இலை ஆடைகளையும், மரப்பட்டைகளையும், மான், புலி முதலியவற்றின் தோலினையும் உடுத்து வாழ்ந்தனர்.  நாளடைவில் அந்நிலை மாறியதும் மக்கள் தங்கள் நுண்ணறிவின் திறத்தால் பருத்தியின் பஞ்சினை நூலாக நூற்று, ஆடையாக நெய்து அணியத் தொடங்கிய காலமே மனிதன் வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாகும்.  அப் புதிய முயற்சியின் விளைவால் தொடங்கிய தொழிலினையே நாம் நெசவுத் தொழில் என்று பெருமையுடன் கூறுகிறோம்.

இது வீட்டுத் தொழில்களில் முக்கியமானது.  பண்டைத் தொழில்களுள் ஒன்று.  விவசாயத்துக்கு அடுத்தது.  மக்கள் நாகரீகம் அடையத் தொடங்கியதும், கையாண்ட முதல் கைத்தொழில் என்று கலைக் களஞ்சியம் குறிப்பிடுகின்றது.  தொல்பொருள் வரலாற்று அறிஞர்கள் இந்நெசவுத் தொழில் புதிய கற்காலத்தில் ஆரம்பமாயிற்று என்பர்.  ஆடையைப் பற்றிய குறிப்புகள் தொல்காப்பியத்தில் காணப்படுவதால் இந்நெசவுத் தொழிலின் தொன்மையை நாம் நன்கு அறிய முடிகின்றது.

                தொல்காப்பியப் பொருளதிகாரம்  - (249-2)
                “கூழை விரித்தல் காதொன்று களைதல்
                ஊழணி தைவரல் உடையெர்த் துடுத்தலோ
                டூழி நான்கே இரண்டென மொழிப

எனக் குறிப்பிட்டுள்ளது.

சங்க கால இலக்கியங்கள் மிகத் தெளிவாக நெசவுத் தொழிலின் வளர்ந்த நிலையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. நெசவுத் தொழிலுக்கு பருத்தி மிகவும் இன்றியமையாத மூலப் பொருளாக விளங்கியது.  தமிழகத்தில் பருத்தி விளைவும் மிகுதியாக இருந்திருக்கும் என்பது பருத்தி வேலிச் சீறூர்’ (299.1), ‘பன்னல் வேலியிப் பணைநல்லூர்’ (345.20) என்ற புறநாநூற்று அடிகளினின்றும் அறியலாம்.  இப்பருத்தியே அன்றி இலவமரம், கொங்கு மரம் முதலிய மரங்களிலிருந்து வேண்டிய பஞ்சு சேகரித்து நெசவுத் தொழிலுக்குப் பயன்படுத்தினர்’. சங்க இலக்கியப் பாடல்களில் பல இடங்களில் நெய்தல் தொழில் பற்றிப் பேசப்படுகின்றன.  பருத்தி, பட்டு ஆகிய பொருள்களைக் கொண்டு துணிகள் நெய்யப்பட்டன.

பருத்திப் பஞ்சை அதனுடைய கொட்டையிலிருந்து பிரித்தெடுக்க வில்லினைப் பயன்படுத்தினர் என்பதை அகநானூற்றுப் பாடலடியாலும், நற்றினைப் பாடலடியாலும் அறியலாம்.

                “வில்லெறி பஞ்சின் வெண்மழை தவழும்”  (அகம் 133.5)
                “வழிதுளி பொழிந்த இன்குரல் எழிலி
                எஃகுறு பஞ்சிற் றாகி.

பின்னர் பருத்திக் கொட்டையை நீக்கித் தூய்மை செய்யும்போது பஞ்சின் புறத் தோலினையும் எஞ்சி நிற்கும் கொட்டையையும், தூசியையும் நீக்குவதற்காக நன்றாக புடைத்தெடுப்பர். இக்கருத்து

                “சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த
                பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்து”                       (புறம் 326.4-5)

இங்கு சிறை பஞ்சின் புறத் தோலையும், செற்றை தூசியையும் குறிப்பன.
மகளிர் பருத்திப் பஞ்சினை செப்பஞ் செய்து நுண்ணிய நூலாக நூற்பதில் கைத்திறம் பெற்று விளங்கினர். இப்பெண்கள் பருத்திப் பெண்டிர் என அழைக்கப்பட்டனர். மேலும், கணவரை இழந்த மகளிர் இத்தொழிலில் பெரிதும் ஈடுபட்டிருந்தனர் என்பது

                “ஆளிள் பெண்டிர் தாளில் செய்த
                நுணங்கு நுண் பனுவல்”                              (நற். 353.1-2)

என்னும் பாடலடிகளில் தெரிகின்றது. இப்பெண்டிர் இரவு நேரத்திலும் நூல் நூற்றனர் என்பது பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்து என்ற அடியால் புலப்படும். இவ்வாறு பெண்கள் நூற்று இழைத்துத் தந்த நூலைப் பாவாக விரித்துத் தறியில் நெய்து ஆடையாகக் கொடுக்கும் கடமை ஆடவர் தொழிலாய் அமைந்தது.  நுண்மையான நூலைக் கொண்டு நெய்யப்பட்ட ஆடையினுடைய இழைகளின் வரிசைகளைக் காண்பதற்கு இயலாத வகையில் நுட்பமாக நெய்யப்பட்டிருந்தது.

                “பாம்புரி யன்ன வடிவினை காம்பின்
                கழைபடு சொலியி னிழையணி வாரா
                நோக்கு நுழை கல்லா நுண்மைய”                                  (புறம். 398.20)

என்ற பாடற்குறிப்புகள் மேற்கூறிய கருத்தை வலியுறுத்துவன.
மிக உயர்ந்த மெல்லிதான துணிகளும் நெய்யப்பட்டன. அவற்றிற்கு துகில் என்பது பெயர்.

                (எ.டு.) புகை விரிந்தன்ன பொங்கு துகில்       (புறம் 398.20)

தறி நெய்து அறுக்கப்பட்டமையால் அறுவை என்றும், நெய்த உடையினைச் சுருக்கமின்றி மடித்து மடித்து விற்று வந்தமையால் மடி என்ற பெயரும் வழங்குவதாயிற்று.

இங்ஙனம் நெய்யப்பட்ட துணிகளுக்கு நிறம் ஊட்டினதற்குச் சான்றாக, நம் தமிழகத்தில் அரிக்கமேடு என்ற இடத்தில் நடந்த அகழ்வாய்வின் மூலம் மஸ்லின் துணிகளுக்குச் சாயம் தோய்க்கப் பயன்பட்ட செங்கற்களால் ஆன இரண்டு தொட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.  அவற்றின் காலம் கி.பி. முதல் நூற்றாண்டு எனக் கணக்கிடப்பட்டுள்ளது.  சங்க இலக்கியப் பாடல்கள் சிலவற்றில் பல்வேறு வண்ண ஆடைகளைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.  காட்டாக, நீலநிறத் துணிகள் - நீலமென்சேக்கை (கலி.72-1) என்றும், செந்நிறத் துணிகள் - துவர்செய் ஆடை (நற். 33) கோபத் தன்ன தோயா பூதுகில் (திருமுருகு. 15) என்றும் வரும் இடங்களைக் கூறலாம்.

நீல நிறத் துணிகளும், செந்நிறத் துணிகளும் இருந்தனவென்று இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம். இத்துணிகளுக்கு நிறம் எவ்வாறு ஊட்டப் பெற்றதென்று அறிய வேண்டும்.  பண்டைக் காலத்தில் வண்ணம் தயாரிக்க காடுகளில் முளைத்திருக்கும் செடிகளின் தழைகளும், மரப்பட்டைகளும், அவுரிச் செடிகளும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.  அவுரிச் செடிகள் நம்நாட்டிலிருந்து மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.  வண்ணம் தயாரிக்கப்படுவதால்தான் இச்செடிகள் மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன எனக் கருத இடமுண்டு”.

ஹேரடோடஸ் என்னும் யவன ஆசிரியர் நம் நாட்டு பஞ்சைப் பற்றிப் பேசும்போது மரங்களில் வளரும் பஞ்சுஎன்றும், அஃது ஆட்டு ரோமங்களால் உண்டான கம்பளிகளிலும் மேலானது. ஏன்றும் கூறுகிறார்.
இவ்வாறு திறமையுடன் நெய்யப்பட்ட ஆடைகளின் சிறப்பினை சங்க இலக்கியப் பாடல்கள் பின்வருமாறு புகழ்ந்து பாடுகின்றன. சில சான்றுகள்:

1.            அரும்பி மலர்ந்த பகன்றையின் புதுப் பூப்போன்ற அகல மடிக்கப்பட்ட ஆடை என்ற கருத்தமைய

போதுவிரி பகன்றைப் புதுமல ரன்ன
அகன்றுமடி கலிங்கம்            (புறம் 393:17-18)

2.            மூங்கிலின் உட்புறத்தே உள்ள தோல் போன்றது என்பதை

கழைபடு சொலியி னிழையணி வாரா
ஒண்பூங் கலிங்கம்               (புறம் 383: 10.11)
                என்றும்,

3.            பாலாவியைப் போன்றது என்ற பொருளமைய,

ஆவியன்ன அவிர்நூற் கலிங்கம் (பெரும் 469)
                என்றும்,

4.            பாம்பு உரித்த தோல் போன்றது என்ற பொருளமைய,

பாம்புரி யன்ன வடிவின          (புறம் 383.10)

          என்றும் பாடப்பட்டுள்ளன.

இங்ஙனம் மென்மையாக நேர்த்தியுடன் நெய்யப்பட்ட ஆடைகளுக்கு மேலும் அழகூட்டும் வகையில் நேரிய கரைகள் அமைத்து அதில் அழகிய பூ வேலைப்பாடுகளும் செய்தனர். இக்கருத்தினை

                                .... நேர்ரை
                                நுண்ணூல் கலிங்கம் உடீஇ  (புறம் 392:14.15)
                                கோட்டைக் கரைய பட்டுடை      (பொருந. 155

(பட்டுடையின் கரைகளில் திரள முடிந்த முடிகள் அழகு பெற அமைக்கப்பட்டிருந்ததை இவ்வடி உணர்த்தும்)

                            வாண்பூங் கலிங்கம்         (புறம். 383:12:397:15)
                            நீலக் கச்சை பூவார் ஆடை  (புறம்: 274)
                           புன்பூங் கலிங்கம் (சிறிய பூக்கள் அமைந்த ஆடை)  (நற். 90)
என்ற பாடற்குறிப்புகள் உணர்நத்தவல்லன.

பண்டைத் தமிழர் பஞ்சைப் பயன்படுத்தி நெய்த ஆடைகளே அல்லாமல் பட்டு நூலைப் பயன்படுத்தி பட்டாடை நெய்தனர். மேலும் மரப்பட்டையில் உள்ள நாரினை எடுத்துப் பின்னி மலைவாழ் குறவர் ஆடையாகப் பயன்படுத்தினர் என்பதை,

                                மரனாருடுக்கை மலையுறை குறவர்          (நற். 64.4)

என்ற பாடலடியால் அறியலாம்.

போன் இழைகளாலும் ஆடைகள் நெய்யப்பட்டுள்ளன என்பதை

                                பொன்புனை உடுக்கையோன்

என்ற பரிபாடல் (14.18) மூலம் அறியலாம்.

தைக்குந் தொழில்

சங்க காலத் தமிழர் நேர்த்தியான ஆடையை நெய்வதில் வல்லவர் என்பதைக் கண்டோம். ஆந்த ஆடைகளில் சிறியனவும், பெரியனவுமான பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டமைக்கான சான்றுகளும் உள்ளன. இத்தகைய சிறந்த ஆடைகள் தைப்பதற்குத் தையற்காரர்கள் இருந்திருத்தல் வேண்டும். அரசியல் அலுவலரும் உயர்குடிப் பெண்டிரும் சட்டையும் கச்சும் அணிந்திருந்தனர் என்பதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன. சான்று:
                                “........... படம்புக்குப்
                பொருகணை தொழலச்சிய புண்தீர் மார்பின்
                விரவுவரிச் கச்சின்.”                                                          (பெரும். 69.71)

நீராடுவதற்குத் தனி உடை உடுத்தனர். அது புட்டகம் எனப்பட்டது.

                “புட்டகம் பொருந்துவ புனைகு வோரும்”  (பரிபாடல் 12:17)

இவற்றை நோக்க அக்காலத்தில் தையல் தொழில் சிறப்புற்று இருந்தமை புலனாகும்.

உயர்குடி மக்கள் மெத்தென்ற படுக்கைகள் தயாரித்து அதில் பள்ளி கொண்டனர்.  நெடுநல்வாடை என்னும் சங்கப் பாடலில் அரசமாதேவிக்குரிய அணைகள் அன்னப்பேட்டின் தூவியால் ஆனவை. கட்டிலின்மீது படுக்கை விரிக்கப்பட்டிருந்தது என்னும் செய்திகள் அக்காலத்தில் மெத்தைகளும் தலையணைகளும் தயாரிக்கும் தொழில் உயர்நிலையில் இருந்ததைப் புலப்படுத்தும்.

                “மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத்
                துணைபுணர் அன்னத் தூநிறத் தூவி
                இணையணை மேம்படப் பாயணை விட்டு.:   (நெடுநல். 131-33)

*****