Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

திங்கள், 26 டிசம்பர், 2016

ஆண்பால் பெண்பால் அன்பால்

vikatan.com




யுகபாரதி


வாழ்வின் ஆதாரமான ‘ஆண்-பெண் உறவுகளுக்குள் மட்டும் ஏன் இத்தனை வேறுபாடுகள்? தொழில்நுட்பங்கள் வளர வளர, விரிசல்களும் வித்தியாசங்களும் ஏன் இவ்வளவு அதிகரிக்கின்றன? சரிசெய்யவேண்டியது எங்கே? நம் குழந்தைகளுக்கு, ஆண்-பெண் மனங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை எப்போது கற்றுக்கொடுக்கப்போகிறோம்? காதல், நட்பு, உறவு, பிரிவு... என ஆண்-பெண் இடையே இருக்கும் இந்த இணைப்பைப் பலப்படுத்தும் அந்த ஒன்று எது?' விடைகளுக்கான விகடனின் தேடலே இந்தத் தொடர். வாரம் ஒரு பிரபலம் தங்களுடைய வாழ்வின் வழியே, கற்றலின் வழியே வெளிச்சம் பாய்ச்சுகின்றனர். 


`நீங்கள் கேட்டவை’யில் அடுத்து வர இருக்கும் பாடல் இடம்பெற்ற திரைப்படம், `உல்லாசப்பறவைகள்'. பாடலைப் பாடியிருப்பவர் ஜென்சி' எனச் சொன்னதும், எனக்கும் என் அக்காவுக்கும் டிரான்சிஸ்டரைக் கைப்பற்றும் போட்டி தொடங்கிவிடும். 



ஸ்வாமி மாடத்துக்கு அருகில் வைக்கப் பட்டிருந்த அந்த டிரான்சிஸ்டரை, கிணற்றடிக்கோ அல்லது கீழாநெல்லிச்செடி படர்ந்து இருந்த பின்வாசல் முற்றத்துக்கோ எடுத்துப்போக அக்கா விரும்புவாள். பல நேரங்களில், அதற்கான காரணத்தை என்னால் விளங்கிக்கொள்ள முடியாது. `பாடலைக் கேட்பது என்றால் இங்கேயே கேட்க வேண்டியது தானே... டிரான்சிஸ்டரை எடுத்துக்கொண்டு ஏன் தனியே போகவேண்டும்?' என எண்ணி யிருக்கிறேன். அக்காவுக்கு அப்போது 17 வயது.



என் வீட்டில் மட்டும் அல்ல, அக்கா-தம்பி உள்ள, அண்ணன்-தங்கை உள்ள அநேக வீடுகளில் இப்படியான சண்டைகள் மூளக் காரணமாக இருந்தவர் ஜென்சி என்கிற பாடகி. 80-களில், ஜென்சியின் குரல் மத்தியத்தரக் குடும்பப் பெண்களின் அபிலாஷைகளை ஆட்கொண்டது என்றால் மிகை அல்ல. மெல்லிய சோகத்தையும் ததும்பி வழியும் காதலையும் கொண்டிருந்த அந்தக் குரலில், நம்முடைய அக்காக்கள் தங்களுடைய அந்தரங்க எழுச்சிகளின் வடிகாலைக் கண்டிருந்தார்கள். குடும்பக் கட்டுமானமும் சாதியக் கட்டுமானமும் ஓரளவு தளரத் தொடங்கியிருந்த அந்தக் காலகட்டத்தில், விநோதமான விடுதலை மனநிலையை ஜென்சியின் குரல் அவர்களுக்கு வழங்கிக்கொண்டிருந்தது.



`அடி பெண்ணே...' என ஆரம்பிக்கும் `முள்ளும் மலரும்' பாடலும், `தெய்வீக ராகம்...' எனத் தொடங்கும் `உல்லாசப்பறவைகள்' பாடலும் ஏதோ ஒருவித மலர்ச்சியை அவர்களுக்கு உண்டு பண்ணின. சொல்லக் கூடாத அல்லது சொல்ல விரும்பாத ரகசியங்களை, இதயத்துக்கு நெருக்கமான மொழியில் அந்தக் குரல் பிரதிபலித்தது. 



ஜென்சியின் பாடல்கள், இப்போதுகூட தனித்துக் கேட்க விரும்பும் பாடல்களாகவே இருந்துவருகின்றன. இளையராஜா, தன் உச்சபட்ச சோதனை முயற்சிகளை எல்லாம் அந்தக் குரலின் வழியேதான் நிகழ்த்திப் பார்த்திருக்கிறார். இதயத்தைச் சட்டெனக் கவ்விக்கொண்டோடும் அந்தக் குரல், ஒரு சூழ்நிலையில் ஏனோ பாடுவதையே நிறுத்திக்கொண்டது.



அந்தக் குரல் பாடாமல்போனதற்கான பின்னணித் தகவல்கள் எதுவாக இருந்தாலும், `ஜென்சி, பெண்ணாக இருந்ததே பிரதான காரணம்' என உணர்ந்துகொள்ள முடிகிறது. ஒரு பெண், தன் போக்கில் தன் வாழ்வை அமைத்துக்கொள்ளவோ, தொடரவோ இந்தச் சமூகம் அனுமதிப்பது இல்லை. அளப்பரிய திறனைக்கொண்டிருந்தாலும் அவர்களும் சராசரிப் பெண்களாகவே நடத்தப் படுகிறார்கள். இன்றும்கூட, ஜென்சி பாடிய பாடல்களே அதிக அளவில் பதிவிறக்கம் செய்யப்படுவதாக இசை நிறுவனங்கள் சொல்கின்றன.
`என் வானிலே...' என்ற `ஜானி' திரைப்படப் பாடலைக் கேட்கும்போது எல்லாம் ஜென்சியின் குரலுக்கு உள்ளே இருந்து ஒளிரும் தீபங்களை நம்மால் பார்க்க முடியும். 



`ஆயிரம் மலர்களே மலருங்கள்...' என்ற `நிறம் மாறாத பூக்கள்' திரைப்படப் பாடலில் பரவிக்கிடக்கும் வாசங்களை இப்போதைய வளரிளம் பருவத்தினர்களும் நுகர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அந்தப் பாடலில் `எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ?' என்றோர் வரி வரும். அதை உச்சரிக்கையில் ஜென்சியின் குரல் உடைந்து மேலெழும். அணைகட்டி நிற்கும் கண்ணீரைச் சிந்திவிடாத ஜாக்கிரதையோடு அந்த வரிகளை அவர் உச்சரிப்பார். 



ஜென்சி பாடும் முறையில் உள்ள நுட்பங்களைச் சொல்லும் அளவுக்கு நான் இசையறிவு உள்ளவன் அல்ல. என்றாலும், அவர் குரலில் ஏதோ ஒரு மந்திரசக்தி உள்ளதாகவே படுகிறது. என் அக்கா, டிரான்சிஸ்டரை எடுத்துக்கொண்டு தனித்துப்போக விரும்பியதுகூட அந்த மந்திர சக்தியின் மகிமையாக இருக்கிறது என்பதை நம்புகிறேன்.



ஜென்சி பாடிய `தெய்வீக ராகம்...' என்னும் பாடல் இடம்பெற்ற காட்சி. பச்சைப்பசேல் வயல்வெளியில் ஓர் ஓரத்தில் கமல்ஹாசன் நின்றிருப்பார். அவருடைய பார்வை தூரத்தில் வரும் தீபாவை நோக்கியே இருக்கும். வயல்வெளியைக் கடந்த ஓர் ஓடையை வந்து சேருவார் தீபா. அப்போதும் கமல்ஹாசன் தீபாவை ரசித்தபடி இருப்பார். அவர் எதை ரசிக்கிறார் என்பதை விளக்கிக்காட்டிட, தீபா முழங்கால் வரை சேலையைத் தூக்கிக்கொண்டு குத்துக்காலிட்டு உட்காருவது காண்பிக்கப்படும். ஓடை நீரில் சேலை நனையாதிருக்க அவ்வாறு உட்காரும் தீபா, தம்முடைய தாகத்தைத் தணித்துக்கொள்ள கைகளால் நீரை அள்ளிப் பருகத் தொடங்குவார். தீபா அள்ளிப்பருகிய நீர்க்காட்சியில் கமல்ஹாசனின் விரகதாபமும் தணிவதாகக் காட்சியை நகர்த்துவார்கள். பாடலில் இடம்பெற்றிருக்கும் வரிகளுக்கும் அந்தக் காட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. என்றாலும், தீபாவின் முழங்கால் வாளிப்பைக் காட்டுவதற்காகவே அந்தக் காட்சியை அமைத்திருப்பார்கள்.

அதுகூட பரவாயில்லை. நீரை அருந்திய தீபா, அடுத்து வாயைத்துடைக்க முந்தானையையும் அகற்றுவார், இடுப்பு சேலையை சரிசெய்ய வயிற்றுப்பகுதியை காட்டுவார்.  `ஒரு பெண்ணின் கால் மற்றும் தோள் வாளிப்பைக் காட்டியது போதாது என, மொத்த வாளிப்பையும் ஏன் காட்டுகிறார்கள்?' என யோசிப்பதற்குள் பாடல் முடிந்துவிடும். பாடல் வரிகளில் சொல்லப்பட்டிருப்பது அன்பின் வெளிப்பாடு. ஆனால், காட்சியோ காமாந்தகப் பதிவு. 


கலை என்ற சட்டகத்துக்குள்ளும் பெண் என்பவள் சதைக்கோலமாகவே பார்க்கப் படுகிறாள். குறிப்பிட்ட பாடலைப் பாடிய ஜென்சி, அதன் பிறகு யார் கண்ணிலும் தென்படாமல்போனதற்கும், திரும்பத் திரும்ப தொலைக்காட்சியில் அந்தப் பாடலில் நடித்த தீபா தென்படுவதற்கும் தொடர்பு இருப்பதாகவே படுகிறது.



ன்னுடைய இளவயது முழுக்க அக்காவும் அம்மாவுமே நிரம்பியிருந்தார்கள். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வதும் திட்டிக்கொள்வதும் பெண் குறித்த பார்வைகளை எனக்குள் வடிவமைத்தன. அவர்களுடைய உரையாடல்கள், பெரும்பாலும் திருமணம் ஆன பெண்ணுக்கும் திருமணம் ஆகாத பெண்ணுக்கும் இடையில் நிகழும் சம்பாஷனைகளாகவே இருந்தன. 



திருமணத்துக்குத் தயாராகவேண்டிய நிர்பந்தத்தை, அக்காவுக்குச் சொல்லிக்கொண்டே இருந்தாள் அம்மா. `போற எடத்துல...' என்ற வார்த்தையைத் தவிர்த்து, அம்மாவால் அக்காவுக்கு எதையும் சொல்ல முடியாமல் இருந்தது. இத்தனைக்கும் இடதுசாரிப் பின்புலம் உள்ள வீடு என்னுடையது. என்றாலும்கூட, அக்காவும் அம்மாவும் அதற்கு அப்பாற்பட்ட மனத்தையே கொண்டிருந்தார்கள். 



`நான் வாக்கப்பட்டு வந்த காலத்துல, உங்க அப்பா வீட்டுல...' என ஆரம்பிக்கும் அம்மாவின் ஒவ்வொரு சொல்லாடலுக்குப் பின்னும் ஏதோ ஒரு கொடூரத் தகவல் பொதிந்திருக்கும். `எத்தனையோ பட்டும் கெட்டும்தான் உங்களை வளர்த்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் இல்லையென்றால், என்றைக்கோ போயிருப்பேன்' என ஆகாயத்தை நோக்கிக் கைகாட்டும் வழக்கத்தை அம்மா கொண்டிருந்தாள். கல்யாணம் ஆன புதிதில், அப்பா வாங்கிவந்த புது டிரான்சிஸ்டரில் பாடல் கேட்டதற்காக அவர் மாமியார் பேசிய இழிசொல்லை, அழாமல் அம்மாவால் சொல்ல முடிந்தது இல்லை. பாடலைக் கேட்கக்கூட உரிமை மறுக்கப்பட்ட ஓர் அம்மா, தன் மகனைப் பாடலாசிரியனாக ஆக்கிப்பார்த்திருக்கிறாள் என்பது அம்மாவுக்கான பெருமைகளில் ஒன்று.



என் வீடு, எனக்கு உரிய எல்லா சாத்தியங்களையும் ஏற்படுத்திக் கொடுத்தது. சண்டைகளும் சச்சரவுகளும் இல்லாமல் இல்லை. அப்பா என்ற ஆணும், அம்மா என்ற பெண்ணும் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சமூகப் பாத்திரங்களைச் சமரசத்தோடு ஏற்றுக்கொண்டி ருந்தார்கள். கார்ல் மார்க்ஸை அப்பாவும், கருமாரி அம்மனை அம்மாவும் வழிபடுகிறவர்களாக இருந்தார்கள்.



பொழுதாபொழுதுக்கும் பொதுவேலை எனப் போய்க்கொண்டிருந்த அப்பாவுக்கு, அம்மாவின் உள்ளக்கிடக்கையை உணர்ந்துகொள்ளும் சந்தர்ப்பங்கள் வாய்க்கவே இல்லை. உலகத் தொழிலாளர்களை ஒன்றுபடுத்துவதிலும் உள்ளூர் பிரச்னைகளுக்குக் கொடி பிடிப்பதிலும் அவர் கொண்டிருந்த ஆவேசத்தில், அம்மாவின் துயரங்களும் துக்கங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படவில்லை. ஒருவகையில் அவருடைய ஆவேசமும் சமூக அக்கறையும் என்னை வளர்த்துக்கொள்ளப் பயன்பட்டனவே தவிர, அம்மாவுக்கும் அக்காவுக்கும் அயர்ச்சியையே ஏற்படுத்தின. 



பஞ்சாலைத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக அப்பா போராடிக் கொண்டிருக்கையில், சம்பளமே வாங்கிவராத அப்பாவிடம் அம்மா போராடத் தொடங்குவாள். இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அப்பாவுக்குத் தெரிந்திருந்த ஒரே வழி, அம்மாவையும் அந்தப் போராட்டக் களங்களுக்குக் கூட்டிப்போவதாக அமைந்தது. பிறர் பிரச்னைகளைக் காட்டினாலாவது தன் பிரச்னைகள் பெரிது அல்ல என அம்மா நினைப்பாள் என்று அப்பா நம்பினார்.



அதன் விளைவாக அப்போதைய தஞ்சாவூர் மாவட்ட மாதர் சங்கச் செயல்பாடுகளில் அம்மாவும் ஈடுபட்டு, கோஷமிட்டிருக்கிறாள். அப்பாவுக்கு தானும் தன் மனைவியும் கிருஷ்ணம்மாள் - ஜெகநாதனைப்போல ஆதர்சத் தம்பதியாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அது எல்லாம் யதார்த்த நிலையில் எடுபடாமல்போனது. வறுமைசூழ்ந்த வீடுகளில் லட்சியவெறி என்பது, கேள்விக்கு உரியதாகவும் கேலிக்கு உரியதாகவுமே மாறிப்போகிறது.



ஒருமுறை வட மாநிலத்தில் நடந்த மாநாடு ஒன்றில் கலந்துகொள்ள அப்பா, அம்மாவை அழைத்தார். பிள்ளைகளை விட்டுவிட்டு, தான் வர விரும்பவில்லை என்று எவ்வளவோ சொல்லியும் அப்பா விடவில்லை. வேறு வழி இல்லாமல் அரை மனதோடு அம்மாவும் கிளம்ப, நானும் அக்காவும் தம்பியும் அப்பாயி வீட்டுக்கு அனுப்பப்பட்டோம்.



இரண்டே இரண்டு தினங்கள்தான். ஆனாலும், அந்த இரண்டு தினங்களும் அம்மாவை வைதுகொண்டே இருந்தது அப்பாயி. `வந்தவ நிறுத்தி ஆம்பளையக் கேள்விகேப்பாளா... அத விட்டுட்டு இவளும் சேந்து கூத்தடிக்கிறா!' என்றது. 



நானும் அக்காவும், `அப்பாதான் அம்மாவைக் கட்டாயப்படுத்தினார்' எனச் சொல்லியும், அப்பாயி திறந்த வாயை மூடவில்லை. அம்மாவை வசைபாடுகிறபோது எல்லாம் அடங்காமை என்ற பதத்தைச் சொல்லிவந்த அப்பாயி, அப்பாவைக் கம்பீரமான ஆணாகவே பார்த்தது. 



இரண்டு தினங்கள் கழித்து அப்பாவும் அம்மாவும் எங்களை அழைத்துப்போக கிராமத்துக்கு வந்தார்கள். அன்று நடந்த களேபரத்தையோ பரிமாறப்பட்ட வார்த்தைகளையோ நான் எழுதப்போவது இல்லை. அம்மா, அந்தச் சம்பவத்துக்குப் பிறகு எந்தக் கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை. ஒரு முடிவை ஆணே எடுத்தாலும், அது பாதகமாகப் பார்க்கப்படுகையில் பெண்ணே விமர்சிக்கப்படுகிறாள். அதை அனுபவத்தில் இருந்து புரிந்துகொண்ட அப்பா, அதன் பிறகு எங்கும் தனித்தே கிளம்பினார். அப்போதுதான் ஆணைப்போலவே சிந்திக்கக்கூடிய ஒரு பெண்ணுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும் அவலச்சூழல் எனக்கு விளங்கத் தொடங்கியது.


மாதக்கணக்கில் அப்பா வீடு திரும்பாமல் இருந்திருக்கிறார். சில நாட்களில், நள்ளிரவில் காவலர்கள் வந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பாவைக் கைதுசெய்து அழைத்துப்போவார்கள்.
நான்கைந்து முறை, திருச்சி சென்ட்ரல் ஜெயிலுக்குப் போய் நானும் அம்மாவும் அப்பாவைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறோம்; தெருவோரக் கடைகளில் விற்கும் சாத்துக்குடிகளையோ, பேரிக்காய்களையோ ஜெயில் கம்பிகளுக்கு வெளியே இருந்து கொடுத்திருக்கிறோம். 


மாக்சிம் கார்க்கியின் `தாய்’ நாவலை எடுத்துக் கொடுத்து, `இதைப் படி' என அப்பா சொன்னதன் பொருள், சாத்துக்குடியிலும் பேரிக்காயிலும் அடங்கியிருக்கிறது. அப்பா பற்றியிருந்த கொள்கை மீதோ, சார்ந்து இருந்த கட்சி மீதோ அம்மாவுக்கு கருத்தோ... கசப்போ இருந்தது இல்லை. என்றாலும், குடும்பத் தேவைகள் மீது அவர் கொள்ளாதிருந்த அக்கறையைப் பற்றிய வருத்தம் இருந்தது.



`உலக மீட்சிக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒருவர் உப்பு, புளி சமாச்சாரங்களைப் பற்றி எல்லாம் யோசிப்பாரா?' என நினைக்கலாம். நினைக்கவேண்டியதும் நிறைவேற்றவேண்டியதும் ஓர் ஆணுக்கு உரிய பொறுப்பு என்றே நான் கருதுகிறேன். 



`தாய்’ நாவலைப் படிக்கக் கொடுத்த அப்பாவை எந்தப் பெருமிதத்தோடு பதிவுசெய்கிறேனோ, அதேவிதமான பெருமிதங்களை இன்னபிற லெளகீக விஷயங்களில் அவரால் தர முடியாமல் போயின. என்றைக்கோ வரப்போகிற புரட்சிக்காக, இன்றையும் இன்றைய வாழ்வையும் இழக்கத் துணிவதுதான் லட்சிய வாழ்க்கையின் பரிசு என்றால், அந்தப் பரிசே வேண்டாம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இதனால் லட்சிய வாழ்வுக்கு எதிரானவனாக என்னைக் கருதவேண்டியது இல்லை. மாற்றம் என்பது, வீட்டில் இருந்து தொடங்க வேண்டும். சகஜீவியின் சங்கடங்களைப் பொருட்படுத்தாத ஒருவர், லட்சியவாதத்தைப் பின்பற்றுபவராக இருப்பது சாத்தியம் இல்லை. 



க்காவையும் அம்மாவையும் தவிர, வேறு எவருடனும் பழகாது இருந்த என் பள்ளிப் பருவத்தில் எனக்குக் கிடைத்த ஆசிரியைகள் குறிப்பிடத்தக்கவர்கள். மிக ஆரம்பத்திலேயே என்னையும் என் ஆர்வத்தையும் அவர்களால் யூகிக்க முடிந்தது. கலைச்செல்வி, ராஜேஸ்வரி, செல்வநாயகி, வர்ஷா, காயத்திரி, ஆரோக்கியமேரி என வெவ்வேறு பெயர்களால் அவர்கள் அழைக்கப்பட்டாலும், அத்தனை பேரும் எனக்கு ஒருவர்தான். அன்பின் ஊற்றால் அவர்கள் என்னை எப்போதும் ஈரப்பதத்தோடே வைத்திருந்தார்கள். அப்போது புகழ்பெற்றிருந்த கவிஞர்களையும் கவிதைத் தொகுப்புகளையும் அறிமுகப்படுத்தினார்கள். இங்கிதம் தெரியாமல் நான் எல்லை மீறிய சமயங்களில்கூட என் பிழைகளையும் போக்கிரித்தனங்களையும் பொறுத்துக்கொண்டார்கள்.



இச்சைகளின் துய்ப்பாக மட்டுமே பெண்ணைப் புரிந்திருந்த அந்த வயதில், ஒரு பெண்ணின் உடல் உபாதைகளையும் வளர்சிதை மாற்றங்களையும் என்னிடம் பகிர்ந்துகொள்ள அவர்கள் தயங்கியது இல்லை. மர்மங்களுக்குள் சிக்குண்டு நான் என் ஆற்றலை  இழந்துவிடுவேனோ என்று பயந்த அவர்கள், அந்தக் கேடுகளில் இருந்து எல்லாம் என்னைக் காப்பாற்றினார்கள். 



ஒருமுறை செல்வநாயகி மிஸ்ஸிடம், `உங்கள் கண்ணைப் பார்க்க எனக்குக் கூச்சமாக இருக்கிறது' என்றதும், `என்ன கூச்சம்? அதெல்லாம் ஒன்றும் இல்லை' என என் தலையை வருடிக்கொடுத்து நடுநெற்றியில் முத்தமிட்டார். அந்த ஒற்றை முத்தம் என் மொத்த விகல்பத்தையும் துடைத்தெறிந்தது. ஆறுதலோடும் ஆத்மார்த்தத்தோடும் அன்று அவர் என்னிடம் அப்படி நடந்துகொண்ட காரணத்தாலோ என்னவோ, அந்தச் சமயத்தில் என்னோடு படித்த ஓரிரு பெண்கள் மீது எனக்கு ஏற்பட்ட மன எழுச்சியைக்கூட வெளிப்படுத்த முடியாமல்போனது.



பெண்களை நான் தயையுடைவர்களாக உணர்வதற்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள் வாய்த்தன. இன்று வரை எந்தப் பெண்ணாலும் நான் ஏமாற்றப்படவில்லை. துரோகச் செயல்களில் ஈடுபடவோ, குரோதச் சொற்களைப் பயன்படுத்தவோ, அவர்களால் நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை. சென்னை என்ற மாய உலகத்திலும் ஒலித்தகட்டில் ஜென்சியின் பாடலைக் கேட்கும் அக்காக்கள் கிடைத்தார்கள். என் கவிதைகளை வாசித்துவிட்டு கருத்துச் சொல்லும் சிநேகிதிகள் நிறைந்தார்கள். ஆனாலும், நான் என் எல்லைகளுக்குள்ளேயே நின்றுகொண்டேன். 



எந்த இடத்திலும் சிநேகங்களைக் காதலாக நீட்டிக்கவோ,   சிரமங்களில்   மாட்டிக்கொள்ளவோ நான் விரும்பவில்லை. எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவர்கள் கண்களைப் பார்த்தே பேசினேன். கண்களைப் பார்த்துப் பேசப் பழக்கிய செல்வநாயகி மிஸ்ஸை அவ்வப்போது நினைத்துக்கொண்டேன்.



ஒரு பெண்ணோடு ஓர் ஆண் ஏற்படுத்திக் கொள்ளும் சிநேகத்தைவிட, அவளுக்கு அவன் ஏற்படுத்தித்தரும் மரியாதையும் கெளரவமுமே மகத்தானவை. எழுத்தாளர் ரங்கராஜனாக அறியப்பட்டிருக்கவேண்டிய ஒருவர், சுஜாதாவாக அறியப்படும் நிலையை அத்தகைய மகத்துவங்களில் ஒன்றாகக் கருதலாம். 



`எத்தனையோ ஆண்கள் பெண் பெயரில் கதைகளை, நாவல்களை, கவிதைகளை எழுதுகையில், ஏன் ஒரு பெண்கூட ஆண் பெயரில் எழுதத் துணியவில்லை?' என்னும் கேள்வி, என்னுள் எப்போதும் இருக்கிறது. `ஆணாக இருக்கும் தகுதியை அறவே விரும்பாதவளா பெண்?!' என்றும் யோசித்திருக்கிறேன்.



பெண்களை நான் என்னவிதமாக கிரகித்துக்கொண்டேன் என்பதோ, பெண்கள் என்னை என்னவிதமாகச் சகித்துக்கொண்டார்கள் என்பதோ முக்கியம் அல்ல. அவர்களுக்காக நான் எழுதக்கூடிய பாடல்களில் அவர்களைக் கீழ்மைப்படுத்தவோ, கேவலப்படுத்தவோ துணிகிறேனா என்பதுதான் முக்கியம். ஒருசில பாடல்களில் என்னையும் அறியாமல் அப்படியான பிரயோகங்கள் வந்திருக்கலாம். பொது மனிதனாக, பொறுப்புள்ளவனாகக் காட்டிக்கொள்ள முனையும் என்னிடத்திலும் இந்தச் சமூகம் ஒட்டிவைத்த அழுக்குகள் இல்லாமல் இல்லை. போகிறபோக்கில் புழுதி வாரித் தூற்றியிருக்கிறேன். காதல் தோல்வி என்னும் கருமத்தைச் சொல்வதற்காக, அழுகுணிச் சித்தரைப்போல பெண்களைச் சபித்திருக்கிறேன். என்ன செய்ய? `பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான், புவி பேணி வளர்த்திடும் ஈசன்' என்ற அதே பாரதிதானே `பெட்டைப் புலம்பல் பிறருக்குத் துணையாமோ?' என்றும் எழுதினான்.



ஏதோ ஒரு தாக்கத்தில் `குக்கூ' திரைப்படத்தில் `பொட்டப்புள்ள தொட்டதுமே கொட்டமடிங்கிடுச்சி...' என்று நான் எழுதப்போக,  ` `பொட்டை' என்பது பெண்ணை இழிவுபடுத்தும் சொல் இல்லையா?' என்று என் மனைவி கேட்டாள். அவள் கேட்ட கேள்விக்கான சரியான பதிலை இன்று வரை என்னால் சொல்ல முடியவில்லை. கண் தெரியாதவர்களைப் `பொட்டை' எனச் சொல்லும் ஊர் வழக்கை எழுதியதாக மழுப்பியபோதும், அது உரிய பதில் இல்லை என்பதை உணர்ந்தே இருக்கிறேன். எல்லா ஆணுக்குள்ளும் சமூகம் திணித்துவைத் திருக்கும் இப்படியான முடைநாற்றச் சிந்தனைகள் எனக்குள்ளும் இருப்பதை எண்ணி வெட்கப்படுகிறேன்.



ஆணிடத்தில் பெண்ணும் பெண்ணிடத்தில் ஆணும் கொண்டிருக்கும் அன்புக்கு ஈடாக இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. அன்பினால் ஒரு பெண் எதைச் செய்யவும் துணிந்துவிடுகிறாள். அன்பு இல்லாமல் போகையிலும் அப்படித்தான். `நீயா... நானா..?' என்ற முஸ்தீபுகளை எல்லாம் களைந்துவிட்டுப் பார்த்தால், அன்பு என்ற ஒற்றைச் சாளரத்தின் வழியேதான் உயிர் பயணித்துக்கொண்டிருக்கிறது. 



ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு பெண் தன் மகனுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஓர் உதாரணம் போதாதா... ஆணைவிடப் பெண் பெரிதெனப் பேச? அடங்கிக்கிடக்கும் பெண்ணாகவே அற்புதம் அம்மாள் இருந்திருந்தால், தூக்குக் கயிற்றில் இருந்த பேரறிவாளனுக்குத் தண்டனைக் குறைப்பு கிடைத்திருக்குமா? ஒரு பெண் ஒரு காரியத்தை முன்நின்று நடத்துவதும், அதே காரியத்துக்காக செங்கொடி என்கிற ஓர் இளம்பெண் தீக்குளித்து மரித்துப்போவதும் சாத்தியம் என்றால், பெண்களால் சாத்தியப் படாதது எது? அன்பின் தராசு ஆணையும் பெண்ணையும் ஒன்றாகவே எடைபோடுகிறது.



திருமணம் முடிந்த ஆறாவது மாதத்தில் ஒருநாள், என் மனைவி அன்புச்செல்வியோடு சொந்த ஊருக்கு காரில் போய்க்கொண்டிருந்தேன். அப்போது பண்பலையில் ஜென்சி பாடிய, `இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே பறந்தன' என்ற பாடல் வந்தது. சட்டென அவளையும் அறியாமல் `அய்யோ! இந்தப் பாட்டுன்னா எனக்கு அப்படிப் புடிக்கும்' எனச் சொல்லி, வானொலி சத்தத்தைக் கூட்டினாள். எதிர்பார்க்காத அந்தச் சிறு நொடியில், முந்தைய தலைமுறையைச் சேர்ந்த என் அக்காவைப் போலவே என் மனைவியும் நடந்துகொண்டது ஆச்சர்யமாக இருந்தது. `கண்ணை மூடிக்கொண்டு இந்தப் பாடலைக் கேட்டால் அப்படியிருக்கும்' என்றாள். `இவங்க பாடின மத்த பாட்டைக் கேட்டிருக்கியா?' என்றேன். `அவங்க பாடின எல்லா பாட்டையும் ஃபாத்திமா அக்கா மனப்பாடமாப் பாடும்' என்றாள். 



எல்லா அக்காக்களுமே ஜென்சியின் குரலில் பித்துண்டவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் உலகத்துக்குள்ளும் ரகசியத்துக்குள்ளும் சஞ்சரிக்கக்கூடிய ஆண்கள் பாக்கியவான்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக